ஐநா அருகே ஆஸ்கர் நடிகையை விலங்கிட்டு இழுத்து சென்ற போலீஸ் நடிகை, நடிகர் உட்பட 30 பேர் கைது

 

ஐநா அருகே இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம்; ஆஸ்கர் நடிகையை கைவிலங்கிட்டு தரதரவென்று இழுத்து சென்ற போலீஸ் மற்றொரு நடிகை, நடிகர் உட்பட 30 பேர் கைது!ஐநா அருகே இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம்; ஆஸ்கர் நடிகையை கைவிலங்கிட்டு தரதரவென்று இழுத்து சென்ற போலீஸ் மற்றொரு நடிகை, நடிகர் உட்பட 30 பேர் கைது!

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கொடூர தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த போருக்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக உலகம் முழுவதும் தீவிர எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே 2023ம் ஆண்டில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பேசியதற்காக ஹாலிவுட் திரையுலகில் புறக்கணிக்கப்பட்ட பிரபல மூத்த நடிகை சூசன் சரண்டன் (79), மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர் ஆவார். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் நெதன்யாகு உரை நிகழ்த்த வருகை தந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீன ஆதரவு அமைப்பைச் சேர்ந்த சுமார் 200 பேர் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகம் முன்பாக உள்ள முதலாவது அவென்யூ பகுதியில் கூடி திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்த போலீசார், சாலையோர நடைபாதையில் அமர்ந்து ‘நெதன்யாகுவே நரகத்திற்கு போ’ என்று ஆக்ரோஷமாக முழக்கமிட்டவர்களை சுற்றி வளைத்தனர். உடனே ஆஸ்கர் விருது பெற்ற நடிகை சூசன் சரண்டன், எம்மி விருது வென்ற நடிகை ஹன்னா ஐன்பிண்டர், நடிகர் காலேப் ஹியரான், ஜனநாயக கட்சி வேட்பாளர் டாரியலிசா அவிலா செவாலியர் மற்றும் நியூயார்க் நகர சபை உறுப்பினர் சி ஓஸ்ஸே ஆகியோரின் கைகளை பிளாஸ்டிக் பட்டையால் பின்னால் கட்டி போலீசார் கைது செய்தனர். அதே சமயம் அங்கு வந்த நடிகை சிந்தியா நிக்சன் கைது செய்யப்படவில்லை. தடையை மீறி சாலையில் அமர்ந்த குறைந்தது 30 பேரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.