நீரிழிவுக்கு நவீன சிகிச்சை -நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்

எம்மில் பலருக்கும் அறிமுகமான நீரிழிவு நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நவீன முறையிலான எபிஜெனிடிக்ஸ் எனும் சிகிச்சை முறை அறிமுகமாகி இரத்த சர்க்கரையின் அளவை முழுமையாக கட்டுப்படுத்தி ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியை வழங்குகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

உடனே எம்மில் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் வைத்தியர்கள் குருதி பரிசோதனையை மேற்கொண்டு, அதில் ரத்த சர்க்கரையின் அளவை துல்லியமாக பல்வேறு முறைகளில் அவதானித்து அதனை கட்டுப்படுத்துவதற்கு மருந்தியல் சிகிச்சையை முதலில் பரிந்துரைப்பர் என்பதையும், இதனைத் தொடர்ந்து ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இயலவில்லை என்றால்.. இன்சுலின் எனும் மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொள்ளும் சிகிச்சையை பரிந்துரைப்பர் என்பதை பற்றியும் முழுமையாக அனுபவத்தில் அறிந்திருப்போம்.

ஆனால் சிலருக்கு இத்தகைய சிகிச்சையை மேற்கொண்ட பின்னரும் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்பாட்டிற்கு வராமல் இருக்கும். இவர்களுக்கு தற்போது வைத்தியர்கள் எபிஜெனிடிக்ஸ் அணுகுமுறை என்ற நவீன சிகிச்சை முறை மூலம் சிகிச்சை அளித்து ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

தற்போது அறிமுகமாகி இருக்கும் இந்த எபிஜெனிடிக்ஸ் சிகிச்சையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக ஏற்படுவதன் காரணம் என்ன? என்பது குறித்தும், இன்சுலின் உற்பத்தியில் பாரிய பங்களிப்பை வழங்கும் கணையத்தில் உள்ள பீட்டா செல்களின் செயல் திறன் குறித்தும். ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் இதன் சுழற்சி முறை குறித்தும் முழுமையாக ஆராய்வார்கள்.

குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோயாளிகள் மற்றும் பேறுகால நீரிழிவு நோயாளிகளுக்கு இத்தகைய நவீன சிகிச்சை முறை பலன் அளிக்கிறது. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு மரபணு ரீதியாக கடத்தப்படும் சர்க்கரை நோயை. சாத்தியப்படுத்துவதற்கு மரபணுக்களின் செயல்பாடு என்பது முதன்மையானது. இதில் மூன்று வகையான மாற்றங்களை இத்தகைய மரபணு சூழலியல் காரணிகளால் எதிர்கொள்கிறது.

அதனை எளிதாக விவரிக்க வேண்டும் என்றால் ஒழுங்குமுறையற்ற உணவு முறை – கூடுதல் உடல் எடை- மன அழுத்தம்- நாளாந்த நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியின்மை – ஆகிய காரணங்களால் இன்சுலின் எனும் ஹோர்மோன் உற்பத்தியில் சமச்சீரற்ற நிலையை மரபணுக்கள் உண்டாக்குகிறது. சில பெண்மணிகளுக்கு பேறு காலத்தில் மட்டும் ஏற்படும் சமச்சீரற்ற ரத்த சர்க்கரையின் அளவு காரணமாக அவர்களது வயிற்றில் வளரும் சிசுவிற்கும் மரபணு ரீதியாக இத்தகைய பாதிப்பு கடத்தப்படுகிறது.

இதில் எத்தகைய காரணங்களால் கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை அளவு குறித்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை வைத்திய நிபுணர்கள் துல்லியமாக அவதானித்து, அதனை சீராக்குவதற்கான ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் வழங்குவர்.

இதற்காக வைத்தியர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை – பிரத்யேக வாழ்க்கை நடைமுறை- பிரத்யேக உணவு முறை- ஆகியவற்றை உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துவர். இத்தகைய நவீன சிகிச்சையை சிகிச்சை முறையை கடைப்பிடித்தால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழஇயலும்.