ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 7 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக இந்தியா உள்பட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என கோடிக்கணக்கான மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த போர் எப்போது தான் முடிவுக்கு வரும் என காத்திருக்கின்றனர்.
ரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்துள்ள பேட்டியில் அமெரிக்காவுடனான மோதலை தொடர ஈரான் விரும்பவில்லை என்றும், இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவருவதா இல்லையா என்பதை அமெரிக்காதான் தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றிருந்தபோது,
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் பல முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்த்து கொள்ள முடியும் , அதற்காக ஒருவரையொருவர் கொன்று குவிக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார். இஸ்ரேலின் தொடர்ச்சியான தூண்டுதல்களாலும் சதிவேலைகளாலும் மட்டுமே ஈரான் மீது இந்த போர் திணிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாங்கள் இந்த மோதலை தொடர விரும்பவில்லை. போர் முடிய வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பமும் ஆனால் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமா இல்லையா என்பதை அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டவும், போரை முடிக்கவும் ஈரான் தயாராகவே இருக்கிறது என மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் என்ன ஆனது என கேள்வி எழுப்பும் அவர், ஒப்பந்தம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குள்ளாகவே அமெரிக்கா அதை தகர்த்தது என சாடியுள்ளார்.
அமெரிக்கா சர்வதேச சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு நியாயமான முறையில் ஒப்பந்தத்திற்கு வந்தால், அதை ஏற்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்த அவர், அமெரிக்காவின் இடைக்கால தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ தங்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை என கூறியுள்ளார். அமெரிக்காவின் தேர்தல் கால அரசியல் கணக்குகளை பற்றி ஈரான் கவலைப்படவில்லை என்கிறார்.
முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றியபோது, ஈரான் அமெரிக்காவிடம் தலைவணங்காது என பெசெஷ்கியன் உறுதியாக தெரிவித்திருந்தார். இதற்கிடையே, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி , டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் அதில் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.
ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்ற விவகாரத்தில் அமெரிக்காவும் ஈரானும் ஒரு உடன்பாட்டுக்கு வராமல் இருக்கின்றன. இது தான் போரை முடிப்பதில் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தை தயார் என்றும் போரை முடிக்க தயார் என்றும் ஈரான் தரப்பு வெளிப்படையாக கூறி இருப்பது பாசிடிவ் சிக்னலாக பார்க்கப்படுகிறது.



