
எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 125 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் கெய்ரோவிலிருந்து தெற்கே சுமார் 76 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிசா மாகாணத்தின் அல்-அய்யாத் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிசாவிலிருந்து பயூம் நோக்கிப் பயணித்த ரயில், கெய்ரோவிலிருந்து அஸ்வான் (Aswan) நோக்கிச் சென்ற மற்றொரு ரயிலின் பின்புறத்தில் மோதியதாக எகிப்திய ரயில்வே அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதனால் ரயிலின் பல பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.
விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் மற்றும் அவசர சேவைக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்வதற்காக 72 அம்புலன்ஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், மேலும் பலர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ரயில் விபத்து தொடர்பில் விரைவான விசாரணையை முன்னெடுக்குமாறு எகிப்து ஜனாதிபதி அப்தெல் பத்தாஹ் அல்-சிசி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விபத்துக்குக் காரணமாக அலட்சியமாகச் செயற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், விபத்துக்கான தொழில்நுட்பக் காரணங்களைக் கண்டறிவதற்காக அந்நாட்டு அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள், ரயில் பாதைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எகிப்து மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கப் பிராந்தியத்தில் பழமையான மற்றும் விரிவான ரயில்வே கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். எனினும், அந்நாட்டில் கடந்த காலங்களில் பல பாரிய ரயில் விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்தில் பயணிகள் ரயிலின் பல பெட்டிகளில் தீ பரவியதில் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பழைய ரயில்வே கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்காக எகிப்து அரசாங்கம் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், ரயில் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.



