தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், தவெகவின் பலம் 109ஆக உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக பார்க்கப்படுகிறது. இதற்கு, காரணம், 50 வருடங்களுக்கும் மேலாக, தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்து வந்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது தான். எனினும், 107 இடங்களை மட்டுமே இருக்கும் நிலையில், சட்டப்பேரவையில் தனித்து தனது பலத்தை காண்பிக்க முடியாததால் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருந்தது தவெக.
இந்தச்சூழலில் தான், 5 மாதங்களியே மற்றுமொரு தேர்தலுக்கு தயாரானது தமிழ்நாடு. கடந்த, ஏப்ரம் மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் வென்ற அதிமுகவை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
சட்டப்பேரவையில் தங்களது பலத்தை அதிகரிக்கும் நோக்குடன், இடைத்தேர்தல் பரப்புரையில் களமாடியது முதல்வர் விஜய் தலைமையிலான
தவெக. அதேசமயம், வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சித் தாவியதாக குற்றஞ்சாட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பரப்புரை செய்தது. மறுபுறம், மக்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக. இத்தகையசூழலில் தான், இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.
மதுராந்தகம் தொகுதியில், ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருந்து வந்தார். இதையடுத்து, திமுக வேட்பாளர் பரந்தாமன் 2-வது இடத்திலும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 3-வது இடத்திலும் என தொடர்ந்து வந்தனர். அதேபோல, நாம் தமிழர் கட்சி மற்றும் சிபிஎம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருந்து.
ஆனால், தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை ரோலர் கோஸ்டர் போல பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலையில் இருந்து வந்தார்.
ஆனால், சில சுற்றுகளுக்குப் பிறகு, தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைக்கு வந்தார். தொடர்ந்து அதிமுக வேட்பாளர் 2 வது இடத்தில் இருந்து வந்தார். ஆனால், 11 வது சுற்றில் அதுவும் தலைகீழானது. தொடர்ந்து, 3வது இடத்தில் பின் தங்கியிருந்த திமுக வேட்பாளர் சுகன்யா 2 வது இடத்திற்கு வந்தார். எனினும், இதைத் தொடர்ந்து வந்த சுற்றுகளிலும் இந்த நிலையே நீடித்தது.
இதன்மூலம், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வென்றிருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம் :
மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை, தவெக 72, 139 வாக்குகளையும், திமுக 52,068 வாக்குகளையும், அதிமுக, 46,370 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 2,013 வாக்குகளையும், சிபிஎம் 1,577 வாக்குகளையும் பெற்றிருந்தது. இதன்மூலம், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், 20,071 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.
தாராபுரம் தொகுதியைப் பொறுத்தவரை, தவெக, 66,841 வாக்குகளையும், திமுக 57,370 வாக்குகளையும், அதிமுக, 45,280 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 5,268 வாக்குகளையும், சிபிஐ 1,157 வாக்குகளையும் பெற்றுள்ளது. இதன்மூலம், தவெக வேட்பாளர் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல, சட்டப்பேரவையில் தவெகவின் பலம் 107 இடங்களாக மட்டுமே இருந்த நிலையில், தற்போது தவெகவின் சட்டப்பேரவைப் பலம் 109ஆக உயர்ந்திருக்கிறது.



