கேரளாவில் தற்போது பருவமழை தீவிர கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 2 பேரை காணவில்லை. மலப்புரம் மாவட்டம் வான்தூர் பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர், நிலம்பூர்-அமரம்பலம் பகுதியில் உள்ள கோட்டப்புழா ஆற்றில் குளிக்க சென்றிருக்கின்றனர். அப்போது திடீரென நீர்மட்டம் உயர்ந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோல கோட்டயம் மாவட்டம் வாகமண்ணில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது.. டீக்கோய் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, சென்னை ஜவஙர் நகரை சேர்ந்த சங்கீதா அருள் லால்(35) என்ற பெண் உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் காயங்களுடன் உயிர் தப்பினார். இடுக்கி மாவட்டம் கொட்டகம்பூர் பகுதியில் மழையிலிருந்து தப்பிக்க ஒரு தற்காலிக கொட்டகையில் ஒதுங்கியிருந்த 3 பேர் மீது மண் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார். இந்த தொடர் உயிரிழப்புகள் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மற்றும் இடுக்கி ஆகிய 2 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையிலிருந்து ஆரஞ்சு எச்சரிக்கையாக அலர்ட் மாற்றி கொடுக்கப்பட்டிருக்கிறது. நிலைமையை ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை தீவிரமாக கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
மலப்புறம் ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை தேட சிறப்பு பேரிடர் மேலாண்மை படை உடனடியாக அனுப்பப்பட்டிருக்கிறது. இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்ட மக்களுக்கு எஸ்எம்எஸ் வழியாக வானிலை எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. தேவைப்படும் இடங்களில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.



