அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் முடிவு தாங்கள் எதிர்பார்ப்பதை விட மிக அருகில் இருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி காங்கிரஸின் இரு அவைகளிலும் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இந்தத் தேர்தல் முடிவு ட்ரம்பின் அரசியல் செல்வாக்கிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மேலும், புதிய சட்டமூலங்களை நிறைவேற்றுவதிலும் அவரது நிர்வாகத்திற்குச் சவால்கள் ஏற்படலாம்.
இந்நிலையில், அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்கா, ஈரானை நிபந்தனையின்றிச் சரணடையச் செய்ய முயற்சிக்கிறது. இத்தகைய முயற்சிகள் ஆக்கிரமிப்பை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும்.
மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும் எதிரியிடம் ஈரான் சரணடைவதைப் பரிசீலித்தாலோ அல்லது அந்தத் திசையில் சிறிதளவு சாய்வைக் காட்டினாலோ, இதுவரை ஈரான் அடைந்துள்ள மாபெரும் சாதனைகள் அனைத்தும் வீணாகிவிடும்.
தியாகிகளின் இரத்தமும் ஒட்டுமொத்த தேசத்தின் தியாகங்களும் அர்த்தமற்றதாகிவிடும். மேலும், அது ஆணவம் கொண்ட எதிரிக்கு ஊக்கமளித்து, இன்னும் பெரிய கோரிக்கைகளை முன்வைக்கவும், மேலதிக போர்களையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் வழிவகுக்கும். இத்தகைய சூழ்நிலையில் ஈரான் ஒருபோதும் சரணடையாது.
அமெரிக்காவில் அரசியல் கட்சிகள் மாறுவதாலோ அல்லது அமெரிக்காவுக்கு ஈரான் சலுகைகளை வழங்குவதாலோ, ஈரான் மீதான அமெரிக்காவின் விரோதப் போக்கில் மாற்றம் ஏற்படாது. இதற்கு மாறாக நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் பெரும் தவறு செய்கின்றனர்.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மீண்டும் இடம்பெற்றால், போரின் தாக்கம் மிகவும் விரிவடையும். அமெரிக்கா தனது மேலாதிக்கத்தின் முடிவு இன்னும் தொலைவில் இருப்பதாகக் கருதுகிறது. ஆனால், அந்த முடிவு வெகு அருகில் இருப்பதாக நாம் கருதுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.



