செப்டம்பர் 9 முதல் எச்-1பி, எல்-1 விசா நீட்டிப்பு செய்தால் புதிய கட்டணம்

 

எச்-1பி மற்றும் எல்-1 விசாக்களை நீட்டிப்பதற்கான விண்ணப்பங்களுக்கு புதிய கட்டண விதிகளை டிரம்ப் அரசு அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் எச்1 பி விசாவுக்கு விண்ணப்பம் செய்வோர் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் எச்1பி மற்றும் எல் 1 விசாக்களை நீட்டிப்பதற்கும் டிரம்ப் நிர்வாக புதிய கட்டணங்களை அறிவித்து உள்ளது. அதன்படி எச்1பி விசா நீட்டிப்புக்கு ரூ.3.81 லட்சமும், எல் 1 விசாவுக்கு ரூ.4.29 லட்சமும் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனை நிறுவனங்கள், அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் ஊழியர்களைக் கொண்ட கலப்புப் பணியாளர் மாதிரியைச் சார்ந்திருப்பதால், அவை இந்த மாற்றப்பட்ட விதியின் வரம்பிற்குள் வருகின்றன.இந்திய தேர்தல்

அமெரிக்காவில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் எச்1பி அல்லது எல்1 குடியேறாதோர் அந்தஸ்தில் இருந்தால், அவர்களுக்குப் பொருந்தக்கூடிய 9-11(அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்) மறுமொழி மற்றும் பயோமெட்ரிக் நுழைவு-வெளியேற்றக் கட்டணம் என்ற பெயரில் இந்த கட்டணங்கள் செப்டம்பர் 9 முதல் அமலுக்கு வரும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலமும் ஆண்டுக்கு சுமார் ரூ.1500 கோடி வருவாய் கிடைக்கும் என்று டிரம்ப் நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.

இதனால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் எச்1பி அல்லது எல் 1 விசா அந்தஸ்தில் ஆயிரக்கணக்கான இந்தியப் இன்ஜினியர்கள் பணியாற்றி வருகிறார்கள். எனவே அவர்களை பணியில் வைத்திருக்கும் நிறுவனங்களை முடக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியத் தொழில் வல்லுநர்களைப் பொறுத்தவரை, ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சார்ந்த குடியேற்ற அமைப்பில், இந்த மாற்றம் கூடுதல் சுமையைச் சேர்க்கிறது.
இந்தக் கூடுதல் கட்டணம் எச்1பி அல்லது எல்1 பணியாளர்களைப் பணிக்கு அமர்த்தும் அனைத்து அமெரிக்க நிறுவனங்களுக்கும் பொருந்தாது. அமெரிக்காவில் குறைந்தது 50 ஊழியர்களைக் கொண்டிருப்பதோடு, தங்கள் மொத்தப் பணியாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் எச்1பி அல்லது எல்1 குடியேறாதோர் அந்தஸ்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
இந்த புதிய கட்டணங்கள் 100,000 டாலர் எச்1பி விசா கட்டணத்திலிருந்து மாறுபட்டது. இவை தனிக்கட்டணங்கள் ஆகும்.

அமெரிக்க பல்கலையில் தமிழ்நாடு மாணவருக்கு ரூ.3.55 கோடி கல்வி நிதி

தமிழ்நாடு மாணவர் பிரணவ் இளங்கோ அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ரூ. 3.55 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகையைப் பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் ஈரோட்டைச் சேர்ந்த பிரணவ் இளங்கோ, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ‘ஐவி லீக்’ கல்வி நிறுவனமான பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிக்கத் தேர்வாகியுள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 3.55 கோடி மதிப்பிலான முழு கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது.

இந்த உதவித்தொகை அவரது நான்கு ஆண்டு இளங்கலைப் படிப்புக்கான கல்விக் கட்டணம் மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வாழ்க்கைச் செலவுகள் அனைத்திற்கும் தேவையான கட்டணம் ஆகும். பொது சுகாதாரம் பயில பிரவுன் பல்கலைக்கழகத்தின் முழு கல்வி உதவித்தொகையையும் இதன் மூலம் அவர் பெற்றுள்ளார். 17 வயதான பிரணவ் இளங்கோ, தமிழ்நாட்டின் ஈரோட்டில் தொடங்கிய தனது கனவை, அமெரிக்காவின் ரோட் தீவில் அமைந்துள்ள உலகின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிரவுன் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பிரவுன் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, ஹாங்காங் பல்கலைக்கழகத்திலிருந்தும் அவருக்கு 100% கல்வி உதவித்தொகைக்கான வாய்ப்பு கிடைத்தது; இது அவரது கல்விசார் சாதனைகளுக்குக் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்தை உறுதிப்படுத்துகிறது.