இலங்கைத்தீவு அரசியலில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் வெறும் கூச்சல் குழப்பங்களை மட்டுமே விளைவிக்கக்கூடிய, முற்றிலும் பலவீனமடைந்த ஒரு எதிர்க்கட்சிச் சூழலே இன்று தென்னிலங்கையில் காணப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் அல்லது அரசாங்கத்தின் கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் எந்தவொரு ஆக்கபூர்வமான பலமும் இன்றி, வெறும் ஊடக அறிக்கைகளுடனும் சபைக் கூச்சல்களுடனும் எதிர்க்கட்சிகள் முடங்கியிருப்பது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்குப் பெரும் அரசியல் வாய்ப்பாக அமைந்திருக்கின்றது.
இந்த பலவீனத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள தற்போதைய ஆட்சிப்பீடம், தங்களுடைய அரசியல் தளத்தை மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்வதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி வருகின்றது.
இந்த அரசியல் பின்னணியில், நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் மிகவும் தந்திரோபாயமான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
தென்னிலங்கையில் தங்களுக்குள்ள மக்கள் செல்வாக்கு தற்போதைக்கு அசைக்க முடியாததாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள போதிலும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தங்களது அரசியல் பிடியை மேலும் பலப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளிலேயே தேசிய மக்கள் சக்தி தற்போது ஈடுபட்டு வருகின்றது.
குறிப்பாக, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள் மற்றும் உள்ளூர் தேவைகள் சார்ந்த விடயங்களில் தங்களது பிடியை உறுதிப்படுத்தி, வடக்கு கிழக்கில் கணிசமான ஆதரவுத் தளத்தை கட்டியெழுப்பிய பின்னரே மாகாண சபைத் தேர்தல்களுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதன் மூலம், மாகாண சபைத் தேர்தல்களின் போதும் முழுமையானதொரு வெற்றியைப் பெற்று, நாட்டை முழுமையாகத் தங்களது அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே அநுர அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கின்றது.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ரணில் விக்ரமசிங்க போன்ற தங்களுக்கு நெருக்கமான பழைய தலைவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ முயற்சிக்கின்றன என்ற பிரசாரங்களில் எந்தவொரு உண்மையும் இல்லை என்பதை தற்போதைய புவிசார் அரசியல் சூழல் சுட்டிக்காட்டுகிறது.
மாறாக, தற்போதைய கொழும்பு அரசாங்கத்துடன் இரு நாடுகளும் மிக நெருக்கமான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் மூலோபாய ரீதியிலான உறவுகளையே பேணி வருகின்றன. புதுடில்லியில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை தங்களுக்கு எதிரான ஒன்றாகப் பார்க்காமல், இந்தியாவின் ‘அயலகத்திற்கு முதலிடம்’ (Neighbourhood First) என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ் புதிய அரசாங்கத்துடன் மிக வலுவான உடன்பாடுகளை எட்டியுள்ளது.
இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் நிலப்பரப்போ, வான்பரப்போ அல்லது கடல் எல்லையோ சீனா உள்ளிட்ட எந்தவொரு அயல் நாட்டிற்கும் எதிராகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதுடில்லிக்கு திட்டவட்டமான பாதுகாப்பு உறுதியை வழங்கியுள்ளார்.
அண்மையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கொழும்புக்கு விஜயம் செய்து இருதரப்பு பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தமை இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நகர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது.
அதேநேரம், அமெரிக்க அரசாங்கமும் இலங்கையின் புதிய அநுர அரசாங்கத்துடன் நெருக்கமான பொருளாதார மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புடனேயே செயற்பட்டு வருகின்றது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கான ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கி வருவதுடன், புதிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அவசியமான உதவிகளையும் அமெரிக்காவின் USAID நிறுவனம் ஊடாகத் தொடர்ந்து வழங்கி வருகின்றது.
அமெரிக்காவின் ‘சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்’ பிராந்தியக் கொள்கைக்குள் இலங்கை ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகின்றது. சுருக்கமாகக் கூறினால், இடதுசாரிப் பின்னணியைக் கொண்ட அரசாங்கமாக அநுரவின் ஆட்சி இருந்தாலும், சீனாவுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தராத வரை, தற்போதைய அரசாங்கத்தை ஆதரிப்பதற்கும் அதனுடன் இணைந்து பயணிப்பதற்கும் அமெரிக்காவும் இந்தியாவும் முழுமையான விருப்பத்துடன் செயற்பட்டு வருகின்றன.
இதனால் தற்போதைய ஆட்சியை மாற்ற வேண்டிய தேவை புவிசார் அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கும் எழவில்லை என்பது தெளிவாகின்றது.
இதேவேளை, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்த ஆதரவு என்பன குறித்தும் தற்போதைய அரசாங்கம் மிகவும் அவதானமான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவினால் எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பாதீட்டுத் திட்டம் (Budget 2027), இலங்கையின் எதிர்கால நிதிப் பாதையை தீர்மானிக்கும் என நம்பப்படுகிறது.
அதேநேரம் பாதீட்டு மதிப்பீட்டு அறிக்கையின் படி பல குறைப்பாடுகளும் இருப்பதாக பொருளாதார நிபுனர்கள் சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை ஏற்கனவே பெற்று வரும் 2.9 பில்லியன் டொலர் ஐஎம்எப் திட்டத்தின் கீழ், அண்மையில் (ஒக்ரோபர் 2026 இல்) ஊழியர் மட்ட உடன்பாட்டை (Staff-Level Agreement) அரசாங்கம் வெற்றிகரமாக எட்டியுள்ளது. இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகச் சபையின் ஒப்புதலின் பின்னர், அடுத்த கட்டமாக 345 மில்லியன் டொலர் நிதியுதவி (Seventh Tranche) இலங்கைக்கு விடுவிக்கப்படவுள்ளது.
எனினும், இந்த நிதி விடுவிப்பானது சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டின் நிதிக்கொள்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடுகளைப் பொறுத்தே அமையும் என ஐஎம்எப் நிபந்தனை விதித்துள்ளது.
தற்போதைய சூழலில், இலங்கையில் மீண்டும் ஒரு கடுமையான நிதி நெருக்கடி அல்லது பொருளாதார முடக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே சுயாதீனமான பொருளாதார மதிப்பீடுகள் கணிப்பிடுகின்றன. இலங்கை ஏற்கனவே 11 காலாண்டுகளாக தொடர்ச்சியான நேர்மறையான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 6.9 பில்லியன் டொலராக உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை காண்பிக்கிறது.
எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் நிலவும் சவால்களுக்கு மத்தியில், மக்களுக்கு வரி நிவாரணங்கள் மற்றும் மானியங்களை வழங்குவதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் நிதிக் கட்டுப்பாடுகளையும் சமநிலைப்படுத்த வேண்டிய இரட்டைச் சவாலை அநுர அரசாங்கம் தனது பாதீட்டின் ஊடாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது வெளிப்படையான உண்மையாகும்.



