இந்தியா எச்சரிக்கை சவுதியில் உள்ள இந்தியர்கள் படம் பிடிக்கவோ, அதை வௌியிடவோ வேண்டாம்

 

“சவுதியில் வசிக்கும் இந்தியர்கள் ஹவுதியின் டிரோன், ஏவுகணை தாக்குதல்களை படம் பிடிக்கவோ, அதை வௌியிடவோ வேண்டாம்” என இந்தியா எச்சரித்துள்ளது. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போரின் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி நிலையங்கள், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில் இந்தியர்கள் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக “சவுதியில் வசிக்கும் இந்தியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்கள் பதற்றமின்றி அமைதியாக இருக்கவும், தாக்குதல் போன்ற அவசர காலங்களில் சவுதி அரசு பிறப்பிக்கும் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்” என சவுதியில் உள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் ஹவுதியின் ஏவுகணை, டிரோன் தாக்குதல்களை படம் பிடிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் தன் எக்ஸ் பதிவில், “சவுதியில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளூர் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

ஹவுதியின் டிரோன், ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் சவுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகள், அவை தாக்கிய இடங்கள் போன்றவற்றை வீடியோ மற்றும் புகைப்படம் பிடிப்பது, அவற்றை வௌியிடுவது, சமூக வலைதளங்களில் பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு செய்வது சவுதி அரேபியாவின் உள்ளூர் சட்டங்களின்படி கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். தாக்குதல் நடக்கும் நேரங்களில் வான்வௌி பகுதிகளை படம் பிடிக்க முயற்சிக்காமல், உடனே பாதுகாப்பான இடங்களுக்குள் செல்ல வேண்டும்” என எச்சரிக்கையுடன் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் விமான சேவைகள் நிறுத்தம் தொடர்பான தகவலையும் இந்திய தூதரகம் வௌியிட்டுள்ளது. அதன்படி, “ரியாத் மற்றம் தம்மாமுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் 2026 நவம்பர் 7 வரையும், ஜெட்டாவுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமான சேவைகள் வரும் 31ம் தேதி வரையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளது.

ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் தன் எக்ஸ் பதிவில், “ஜெட்டா மற்றும் மக்காவில் இயங்கும் இந்திய தூதரகம் தனது 24 மணி நேரக்கட்டுப்பாட்டு அறைகள் மூலம், சமூக அமைப்புகள் மற்றும் தன்ஆர்வலர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. விமான சேவைகள் முடங்கியதால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க, சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகங்கள் மற்றும் வௌியுறவு அமைச்சகத்துடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் உள்ளது” என தெரிவித்துள்ளது.