லிபியாவின் மிஸ்ரதா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி, தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானத்தின் இரண்டு விமானிகளும் மதுபோதையில் விமானத்தை இயக்கியது அம்பலமாகியுள்ளது. இந்தத் திடுக்கிடும் உண்மை வெளிவந்ததைத் தொடர்ந்து, இரு விமானிகளையும் லிபியா பொது வழக்கறிஞர் அலுவலகம் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
துருக்கியைச் சேர்ந்த தனியார் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தச் சொகுசு ஜெட் விமானம், துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து லிபியாவிற்குப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளது. மிஸ்ரதா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு வெளியேறிப் புல்வெளியில் வேகமாகச் சறுக்கிச் சென்றது. இதில் விமானத்தின் தரையிறங்கும் சக்கரங்கள் உடைந்ததைத் தொடர்ந்து, அது தீப்பற்றி முழுமையாக எரியத் தொடங்கியது.
விமானத்தில் ஜெர்மனி மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பெண் விமானப் பணிப்பெண் என மூன்று பேர் மட்டுமே பயணித்துள்ளனர். நல்வாய்ப்பாக விமானம் முற்றிலும் தீக்கிரையாவதற்குள் மூவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர். எனினும் விபத்து குறித்த பூர்வாங்க விசாரணையின் போது, விமானத்தை இயக்கிய முதன்மை விமானி மற்றும் உதவி விமானி ஆகிய இருவருமே தீவிர மதுபோதையில் இருந்தது மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சாட்சியங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
விமானப் போக்குவரத்து பாதுகாப்பு விதிகளை முற்றிலும் புறக்கணித்து, பயணிகளின் மற்றும் விமான நிலையத்தின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. $22.5 மில்லியன் மதிப்புள்ள நவீன சொகுசு விமானத்தை போதையில் இயக்கி முழுமையாகச் சேதப்படுத்திய இந்தச் சம்பவம் சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



