ஈரான் ஆட்சியாளர்களை முற்றிலும் நிர்மூலமாக்க- டொனால்ட் டிரம்ப் எடுக்கும் ‘பெரிய முடிவு’!

 

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், ஈரான் ஆட்சியாளர்களை முற்றிலும் நிர்மூலமாக்குவதா அல்லது போரை முடிவுக்குக் கொண்டுவருவதா என்பது குறித்துத் தாம் விரைவில் ஒரு “பெரிய முடிவை” எடுக்கவுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இணைய ஊடகமான ‘ஆக்ஸியோஸ்’ நிறுவனத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ஈரானுக்கு எதிரான அடுத்தகட்டப் போர் நகர்வு குறித்த தங்களது அதிரடித் திட்டத்தை டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத் தொடரின் போது, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய 6 வளைகுடா நாடுகளின் தலைவர்களை டொனால்ட் டிரம்ப் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். இந்த முக்கியச் சந்திப்பிற்கு முன்னதாகவே டிரம்ப் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “வளைகுடா நட்பு நாடுகள் என்ன நினைக்கின்றன, அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை நேரில் கேட்டு அறிந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில்அமெரிக்கக் கடற்படை விதித்துள்ள முற்றுகை காரணமாக ஈரானால் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், “நாங்கள் முற்றுகையிட்ட பிறகு ஈரானில் இருந்து ஒரு கப்பல் கூட வெளியேறவில்லை; மீறி வர முயன்ற கப்பல்களைத் தகர்த்து எறிந்தோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், அமெரிக்காவுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கும் ஈரான் அரசு, பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் செய்யவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போதைய நிலைமையை நீண்ட நாட்களுக்குத் தொடர முடியாது என்பதால், தீவிர ராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கி ஈரானை முடக்குவதா அல்லது பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வருவதா என்பதை அமெரிக்கா விரைந்து தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மைக்கு இடையே, டிரம்ப் எடுக்கப்போகும் இந்த ‘பெரிய முடிவு’ உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.