முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவிப்பை (Blue notice) வெளியிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், பசில் ராஜபக்சவை கைது செய்வதற்காக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கோரிக்கைக்கு அமைய அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் தேடப்படும் பிற நபர்களைக் கண்டறிய அரசாங்கம் சர்வதேச சட்ட நடைமுறைப்படுத்தல் வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றதாக கூறினார்.
பசில் ராஜபக்ச தொடர்பான குற்றவியல் விசாரணைகளின் ஒரு பகுதியாக அவரது அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சர்வதேச சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகள் பெற்றுக்கொள்வதை சாத்தியமாக்கும் வகையில் அவருக்கு எதிராக ‘நீல நிற அறிவிப்பு’ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பசில் ராஜபக்சவுக்கு எதிராக நீல நிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு நபர்கள் தேவைப்படும்போது, ’நீல நிற அறிவிப்பு’ மூலம் இன்டர்போலுக்கு அறிவிக்கிறோம். அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிப்பதற்கான முகவரி தெரிந்திருந்தால், அந்த நாட்டிற்கு அவர் தேவைப்படுகிறார் என்பதை ‘நீல நிற அறிவிப்பு’ உணர்த்துகிறது என்று அமைச்சர் கூறினார்.
குற்றவியல் மற்றும் இலஞ்சம் தொடர்பான வழக்குகளில் தேடப்படும் நபர்கள், அவர்கள் முன்பு வகித்த அரசியல் பதவிகள் எதுவாக இருந்தாலும், அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரத் தேவையான சட்ட மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.



