ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதியின் எப்15 ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக வீடியோ வெளியீடு

சவுதி அரேபியாவின் எப்15 ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீடியோ வெளியிட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏமன் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியாவுக்கும் நீண்ட காலமாக போர் மற்றும் மோதல்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் ஹவுதி படையினர், சவுதி அரேபியாவின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமானம் தீப்பற்றி எரியும் காட்சிகள் மற்றும் அதன் சிதைந்த பாகங்களை காட்டும் காணொலியையும் ஹவுதிகள் வெளியிட்டுள்ளனர்.

ஏமனின் மரீப் மாகாணத்தின் வான்பரப்பில், சவுதி அரேபியாவின் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அந்த போர் விமானம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தாக்கியதாக ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. ஹவுதிகள் வெளியிட்டுள்ள சுமார் 4 நிமிட காணொலியில், வானில் விமானத்தை குறிவைத்து தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் இரவு நேரத்தில் தரையில் விமானத்தின் சிதைவுகள் தீப்பற்றி எரியும் காட்சிகளும், பாலைவன பகுதியில் கிடக்கும் கருகிய பாகங்களும் இடம் பெற்றுள்ளன. விமானத்தில் சேத பகுதிகளில் சவுதி அரேபிய கொடியின் அடையாளம் இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், சவுதி அரேபியாவும், இதுவரை அதிகாரப்பூர்வமாக இதை உறுதிப்படுத்தவில்லை. இதற்கிடையே சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள், ஏமனில் ஹவுதி இலக்குகள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ஹவுதிகள் சவுதி பகுதிகளை நோக்கி ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.