தற்கொலை தாக்குதல் – 16 பேர் உயிரிழப்பு; 50+ பேர் காயம் பாகிஸ்தானில்

 

பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு அருகே உள்ள கோஹாட் காவல்படை வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் காவல் துறை தலைவர் ஜுல்பிகர் ஹமீத், “கோஹாட் காவல் படை வளாகத்தில் உள்ள மசூதி ஒன்றில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்ந்தது. வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று கட்டிடத்தின் மீது மோதியதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளது. தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்ந்த பிறகு அந்த அமைப்பைச் சேர்ந்த ஏழு பயங்கரவாதிகள் காவல் படை வளாகத்துக்குள் ஊடுருவி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை தற்கொலைப் படையாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும்” என தெரிவித்துள்ளார்.

 

இந்தத் தாக்குதல் மிகவும் வருந்தத்தக்கது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கைபர் பக்துன்க்வா முதல்வர் சோஹைல் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை கோரியுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கோழைத்தனமான பயங்கரவாத செயல்களால் தேசத்தின் மன உறுதியை சிதைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் 2010-ம் ஆண்டில் இதே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்துள்ளது. கோஹாட் காவல் படை பகுதிக்கு பின்னால் உள்ள காவலர் குடியிருப்புக்குள் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர், 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.