உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் தலைநகரில் சேதம்

உக்ரைன் மீது ரஷ்யா மூன்று நாட்களுக்கு பின் நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க தூதர்கள் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்கோப் ஆகியோர் அதிகாரப்பூர்வ பயணமாக கடந்த வாரம் இறுதியில் ரஷ்யா வருவை தந்தனர். இதன் எதிரொலியாக ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது 72 மணி நேரத்துக்கு எந்த தாக்குதலையும் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தார்.

இந்த காலக்கெடு முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. உக்ரைன் தலைநகரில் உள்ள 5 மாவட்டங்களில் சேதங்களும், தீவிபத்துக்களும் ஏற்பட்டது. 16 இடங்களில் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. ரஷ்யா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.