இன்றைய சூழலில் எம்மில் பலரும் உளவியல் சார்ந்த பாதிப்பிற்கு ஆளாகுவதும், அதிலிருந்து வேறு விடயங்களில் கவனம் செலுத்தி நிவாரணம் பெறுவதுமாக இருக்கிறார்கள்.
சிலருக்கு நாளாந்த கடமைகள் அது தொடர்பான சிந்தனைகள், ஆகியவற்றை பாதிக்கும் அளவிற்கு சோகத்திற்கு ஆளாகி இருப்பர். நெருங்கிய உறவின் நெருங்கிய நட்பின், இழப்பு சிலரை மனதளவில் பாதித்து, மனச்சோர்வை உண்டாக்கும்.
வேறு சிலருக்கு கடந்த காலங்களில் ரசித்து மகிழ்ந்த விடயங்களில் திடீரென்று அல்லது தற்காலிகமாகவோ ஆர்வம் இல்லாமல் இல்லாத நிலை உண்டாகும்.
இவை அனைத்தும் மனச்சோர்வு பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதன் அறிகுறியாகும். இத்தகைய பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணப் பெறுவதற்கு தற்போது ரிப்பீட்டிவ் ட்ரான்ஸ்க்ரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் – rTMS எனும் தொடர் காந்த ஆற்றலை செலுத்தி மேற்கொள்ளப்படும் தூண்டல் சிகிச்சை பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மன சோர்வுக்கான மருந்தியல் சிகிச்சைகள்- கலந்தாலோசனை சிகிச்சைகள்- ஆகியவை மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பவர்களுக்கு.. வைத்தியர்கள் இத்தகைய பிரத்யேக சிகிச்சையை மேற்கொள்ளலாம் என பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய சிகிச்சையின் போது எம்முடைய மூளைப்பகுதியில் உள்ள சில குறிப்பிட்ட நரம்புகளை இலக்காகக் கொண்டு, மூளையின் புற பகுதியிலிருந்து காந்த ஆற்றலை உள்ளே செலுத்தி, பிரத்யேக நரம்புகளை தூண்டி இதற்கு நிவாரணம் தருகிறார்கள்.
அதே தருணத்தில் மனச்சோர்வு பாதிப்பிற்கு இத்தகைய ரிப்பீட்டிவ் ட்ரான்ஸ்க்ரானியல் மேக்னெடிக் ஸ்டிமுலேஷன் சிகிச்சை என்பது முதன்மையாக பரிந்துரைக்கப்படும் சிகிச்சை அல்ல என்பதையும், இது ஒரு நிவாரண சிகிச்சை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
இத்தகைய சிகிச்சை மனச்சோர்வின் பாதிப்பை பொறுத்து.. இருபது அமர்வுகளில் மேற்கொள்ளப்பட்டு.. நிவாரணம் பெறலாம். இத்தகைய பிரத்யேக நிவாரண சிகிச்சையில் பக்க விளைவுகள் குறைவு.
மனச்சோர்வு பாதிப்பில் பல வகைகளும், பல நிலைகளும்.. உள்ளன. இவற்றை வைத்தியர்கள் தான் பிரத்யேக ஆலோசனை மூலம் துல்லியமாக அவதானிப்பார்கள்.
பெரும்பாலும் மூளை பகுதியின் சுரக்கும் ஹோர்மோன்களின் சமச்சீரன்மை, மரபியல் காரணிகள் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத எதிர்கொள்வதற்கு கடினமான விடயங்கள், நீடித்த உடல் நலக் கோளாறு என பல காரணங்களால் இத்தகைய மனச்சோர்வு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதையும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.



