செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரத்தில் அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன்கூடிய தரக்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதுடன், இம்மீறல்களை நிகழ்த்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் இருந்தவர்களை அடையாளங்காணல் உள்ளடங்கலாக இதுபற்றிய பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பில் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.பயண வழிகாட்டிகளைப் படி
அதற்கமைய இலங்கை அரசாங்கம் பதிலளிக்கும் வகையில் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இவ்வறிக்கை 2025 ஒக்டோபர் தொடக்கம் 2026 ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அதன்படி இலங்கை அரசாங்கம் சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ள போதிலும், மிகமோசமான பயங்கரவாதத்தடைச் சட்டத்தைத் தொடர்ந்து பிரயோகித்து வருகின்றது. அதன் விளைவாக தன்னிச்சையான கைதுகள் தொடர்ந்து இடம்பெறுவதுடன், பலர் குற்றச்சாட்டுக்கள் எவையுமின்றி நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி சிவில் சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் அரசின் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். அத்தோடு காணிகள் மற்றும் மதவழிபாட்டுத்தலங்கள் குறித்த பதற்றங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
பல தசாப்தகாலமாகத் தொடரும் நிறைவேற்றதிகாரத் துஷ்பிரயோகம், அடக்குமுறைச் சட்டங்கள், தடுப்புக்காவலின் கீழான வன்முறைகள் மற்றும் ஆழமாக வேரூன்றியிருக்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு இன்னமும் இருக்கிறது. ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய வழக்குகள் மற்றும் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான சில முக்கிய வழக்குகள் சார்ந்து இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது எனினும், நாட்டில் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
அதேபோன்று சித்திரவதைகள் மற்றும் பொலிஸ் காவலின் கீழ் இடம்பெறும் மரணங்கள் தொடர்கின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு சித்திரவதைகள் மற்றும் மிகமோசமான நடத்துகை என்பன தொடர்பில் 602 முறைப்பாடுகளும், 2026 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 138 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. அதுமாத்திரமன்றி பொலிஸ்காவலின் கீழ் கடந்த ஆண்டு 18 மரணங்களும், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 3 மரணங்களும் பதிவாகியுள்ளன. குறிப்பாக போதைப்பொருள் தொடர்பான சிறிய குற்றச்சாட்டில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 40 வயதான கைதியொருவர் கடந்த மேமாதம் 3 ஆம் திகத கடுமையாகத் தாக்கப்பட்டமையினால் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜுலை மாதம் பதிவான வன்முறைகளில் சுமார் 32 பேர் உயிரிழந்தனர். இவை சிறைச்சாலைகளில் நிலவும் தீவிர நெருக்கடி மற்றும் கட்டமைப்புசார் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடியவாறான சிறைச்சாலை மறுசீரமைப்பின் அவசியத்தைக் காண்பிக்கின்றன.
அடுத்ததாக சிவில் சமூகப்பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான மீறல்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பான 16 முறைப்பாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. குற்றப்புலனாய்வுப்பிரிவினர், பயங்கரவாதப் புலனாய்வுப்பிரிவினர், இராணுவத்தினர் உள்ளிட்ட தரப்பினரால கண்காணிப்பு, அச்சுறுத்தல், பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதை இத்தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
அரசாங்கம் இனவாதத்தை எதிர்த்து, இனநல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவித்துவரும் அதேவேளை, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான பரந்துபட்ட முயற்சிகள் ஸ்தம்பிதமடையக்கூடிய அபாயமும், மாற்றத்தை நோக்கிய பயணத்தின் வேகம் மந்தமடையக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.
மேலும் ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளைத் தண்டிப்பதில் தோல்வி நிலவுகின்றது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேல் இடம்பெற்ற ஆயுதமோதலின்போது சகல தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும். அத்தோடு இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை முன்னிறுத்திய அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டம் திருத்தியமைக்கப்படும் வரை அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதுடன், அதன்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்கவேண்டும்.பயண வழிகாட்டிகளைப் படி
மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள், அக்குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்படும் வரை அரச உயர்மட்ட சேவைகளிலும், உயர் பதவிகளிலும் இருந்து விலக்கிவைக்கப்படவேண்டும்.
அதுமாத்திரமன்றி செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரத்தில் அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன்கூடிய தரக்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதுடன், இம்மீறல்களை நிகழ்த்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் இருந்தவர்களை அடையாளங்காணல் உள்ளடங்கலாக இதுபற்றிய பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



