இரு நாடுகளுக்கு இடையே யுத்தம் நடைபெறுவதைப் போல, 2026ஆம் ஆண்டு இயற்கையும் உலக நாடுகளைத் தொடர்ந்து சோதித்து வருகிறது. மழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம், காட்டுத்தீ உள்ளிட்ட பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் உலகின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அமெரிக்காவில் கடுமையான வானிலை நிகழ்வுகள் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து வரும் நிலையில், தற்போது எட்வார்ட் புயலும் அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டின் அட்லாண்டிக் சூறாவளிப் பருவத்தில் உருவான ஐந்தாவது பெயரிடப்பட்ட புயலான எட்வார்ட், மெக்சிகோ வளைகுடாவில் வலுப்பெற்று அமெரிக்காவின் டெக்சாஸ்–லூசியானா எல்லைப் பகுதியை நோக்கி நகர்ந்தது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி பிற்பகல், லூசியானாவின் ஜான்சன் பயூ அருகே மணிக்கு சுமார் 60 மைல் வேகத்தில் அதிகபட்ச காற்றுடன் புயல் கரையைக் கடந்தது.
கரையைக் கடந்த சில மணி நேரங்களிலேயே எட்வார்ட் வலுவிழந்து வெப்பமண்டலத் தாழ்வு மண்டலமாக மாறினாலும், அதன் தாக்கம் உடனடியாக முடிவுக்கு வரவில்லை. தென்கிழக்கு டெக்சாஸ் மற்றும் லூசியானாவின் சில பகுதிகளில் கனமழை பெய்ததுடன், திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குறிப்பாக டெக்சாஸின் சில பகுதிகளில் 17 முதல் 20 அங்குலத்துக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பிகளும் சேதமடைந்தன.
இதனிடையே, 2026ஆம் ஆண்டின் அட்லாண்டிக் புயல் பருவத்தில் இதுவரை ஆர்தர், பெர்தா, கிறிஸ்டோபால், டோலி மற்றும் எட்வார்ட் என ஐந்து பெயரிடப்பட்ட புயல்கள் உருவாகியுள்ளன. இவற்றில் இதுவரை எந்தப் புயலும் அதிகாரப்பூர்வமாக ஹரிக்கேன் நிலையை அடையவில்லை. ஜூன் 1ஆம் தேதி தொடங்கிய அட்லாண்டிக் புயல் பருவம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீடிக்கும்.
இந்த ஆண்டு அட்லாண்டிக் பகுதியில் புயல் செயல்பாடு சராசரியை விடக் குறைவாக இருக்கும் என அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமான கணித்திருந்தாலும், எட்வார்ட் போன்ற ஒரு புயலே குறிப்பிட்ட பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு தற்போதைய நிலை எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
எட்வார்ட் தற்போது வலுவிழந்துவிட்டாலும், அதன் எஞ்சிய ஈரப்பதம் மற்றும் கனமழை காரணமாக டெக்சாஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் தொடர்ந்து காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



