ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் பிரிட்டன் வாசிகள்!

 

பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்களுக்குக் குடிபெயரும் ‘காஸ்ட் ஆஃப் லீவிங்’ கலாச்சாரம் பிரிட்டன்வாசிகளிடையே அதிகரித்து வருகிறது. பாரிஸ், ஸ்டாக்ஹோம் மற்றும் பெர்லின் போன்ற முன்னணி ஐரோப்பிய நகரங்களில் வாழ்க்கைச் செலவு லண்டனை விட கணிசமாகக் குறைவாக இருப்பது சர்வதேச நுகர்வோர் குறியீட்டுஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச வாழ்வாதாரக் குறியீட்டின் தரவுகளின்படி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனிநபர் ஒருவர் சராசரியாக வாழத் தேவையான பணத்தை விட, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 11 சதவீதமும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 10 சதவீதமும் குறைவான செலவிலேயே வாழ முடியும் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பாக லண்டனில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் சராசரி வாடகை ஐரோப்பிய தலைநகரங்களை விட 35 முதல் 40 சதவீதம் வரை அதிகமாக உள்ளது, பிரிட்டன் மக்களை பிற நாடுகளை நோக்கித் தள்ளும் முதன்மை காரணியாக மாறியுள்ளது.

வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல், பொதுப்போக்குவரத்து, மின்சாரம் மற்றும் உணவகங்களின் செலவுகளிலும் பிரிட்டனை விட ஐரோப்பிய நகரங்கள் அதிக சேமிப்பை வழங்கி வருகின்றன. உதாரணமாக, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோம் ஆகிய நகரங்கள் லண்டனை விட சுமார் 45 சதவீதம் வரை மலிவான வாழ்க்கைச் சூழலை வழங்குவதால், வீட்டில் இருந்தே பணியாற்றும் இளம் பிரிட்டன் ஊழியர்கள் பெருமளவில் அந்நகரங்களை நோக்கிப் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகப் பிரிட்டனில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், குறைந்த செலவில் உயர்தர வாழ்க்கை முறையைப் பெற விரும்புவோருக்குப் பாரிஸ், பர்லின், பார்சிலோனா போன்ற நகரங்கள் சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன. பிரிட்டன் அரசு வரி விதிப்புகளையும் வாழ்க்கைச் செலவுகளையும் சீரமைக்கத் தவறினால், நாட்டின் திறமைவாய்ந்த பணியாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வது மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.