ஈரானுடன் எந்த நாடும் அல்லது நிறுவனமும் எவ்வித பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியனை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். அப்போது ஈரானுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்புவதாக மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து அமெரிக்க ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், ‘‘ஈரானுடன் எந்த நாடும் அல்லது நிறுவனமும் எவ்வித பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது. ஈரான் அரசுக்கு யாரும் ஆதரவளிக்கக் கூடாது, அனைவரும் அந்த நாட்டை விட்டு தள்ளியிருக்க வேண்டும். ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் மற்றும் நிதித் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் அல்லது வங்கிகள், அமெரிக்க டாலர் அடிப்படையிலான உலகளாவிய நிதி அமைப்பில் இருந்து முற்றிலும் முடக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கி, அந்நாட்டை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதே அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதற்கிடையே, ஈரான் மீது அமெரிக்கா நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அண்டை நாடுகளான ஜோர்டான், ஈராக், குவைத், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட தாக்குதல் எந்த நேரத்திலும் நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இந்த சூழலில், கிர்கிஸ்தானில் நடந்த 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், ஈரான் அதிபர் பெஷெஷ்கியானும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஈரானுடன் ஒப்பந்தம் செய்தால் இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிக்க நேரிடும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், ‘இந்தியா- ஈரான் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எந்த வித பேச்சுவார்த்தையும் நடப்பதாக நான் நம்பவில்லை. ஒவ்ெவாரு நாட்டிற்கும் ஒரு வெளியுறவு கொள்கை இருக்கும். பல நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதார தடையை வேறு எந்த நாடுகளும் மீற கூடாது. அப்படி, மீறி ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும். இந்த விவகாரத்தில் டிரம்ப் மிகவும் தெளிவாக இருக்கிறார்’ என்றார்.



