மேலும் பல , தொடர் பேரிடர்கள் ஏற்படலாம்- சீனா எச்சரிக்கை

திபெத் பீடபூமியில் உள்ள பனிப்பாறைகளின் நிலைத்தன்மை மேலும் குறையும் என்பதால் எதிர்காலத்தில் பல பனிப்பாறை சரிவுகளும், நேபாள வெள்ளத்தை போன்ற தொடர் பேரிடர்களும் ஏற்படலாம் என சீனா எச்சரித்துள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி, இமயமலைப் பகுதியில் பனிப்பாறை உடைந்து விழுந்ததில் நேபாள-திபெத் எல்லையில் ராட்சத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1,259 ஆக அதிகரித்துள்ளது. 9வது நாளாக நேற்றும் மீட்புப் பணிகள் நடந்த நிலையில் 5,083 பேரை இன்னும் காணவில்லை என கூறப்பட்டுள்ளது.

இதே போல திபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாகவும் 541 பேரை காணவில்லை எனவும் சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சீன அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான தேசிய காலநிலை மையத்தின் துணை இயக்குநர் காவோ ரோங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 60 ஆண்டுகளில் திபெத்திய பீடபூமியில் உள்ள பனிப்பாறை பகுதி சுமார் 24 சதவீதம் சுருங்கியுள்ளது. சுமார் 7,000 சிறிய பனிப்பாறைகள் முற்றிலும் மறைந்து விட்டன. எதிர்காலத்தில் திபெத்திய பீடபூமி முழுவதும் உள்ள பனிப்பாறைகளின் கட்டமைப்பு நிலைத்தன்மை மேலும் குறையும்.

ஆகவே பனிப்பாறை தொடர்பான பேரிடர்கள் அடிக்கடி நிகழக்கூடும். அவை அதிக அழிவை ஏற்படுத்துவதோடு தொடர் விளைவுகள் மூலமாகவும் பாதிப்புகளை பெருக்கக் கூடும்’’ என எச்சரித்துள்ளார்.இதற்கிடையே, நேபாள வெள்ளத்தை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் இமயமலை சுனாமி என குறிப்பிட்டுள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டிய சர்வதேச நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

வெளிநாட்டு நிதிகள், உள்நாட்டு உதவிகள் குவியும் நிலையில், நேபாளத்தில் பள்ளி குழந்தைகள் தங்களின் உண்டியல் சேமிப்பு பணத்தையும் அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கின்றனர். தொடர் மழைக்கு நடுவே மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடந்து வரும் நிலையில் திபெத்தில் நேற்று 5.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

உருவ பொம்மைகளுக்கு இறுதி சடங்கு

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேற்றுடன் 9 நாள் ஆன நிலையில் இதுவரை மாயமானவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் நம்பிக்கையிழந்த அவர்களின் குடும்பத்தினர் உருவ பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு செய்யத் தொடங்கி உள்ளனர். ரசுவா மாவட்டத்தின் பஹரேபெசி கிராமத்தில் வைக்கோல் நிரப்பி செய்யப்பட்ட உருவ பொம்மைகளை பாடையில் கட்டி தூக்கி வந்து கிராமமக்கள் பலர் இறுதிச் சடங்கு செய்தனர். இது காண்போரை கடும் வேதனை அடையச் செய்தது.