பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் பின்னடைவாக, பூமியின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தும் வாய்ப்பை உலகம் தவறவிட்டது என ஐநா முதல் முறையாக ஒப்புக் கொண்டது. கடந்த 2015ம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில், தொழில்துறை புரட்சிக்கு முந்தைய காலத்தை ஒப்பிடும் போது உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்யசுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென உலக நாடுகள் ஒப்புக் கொண்டன. நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்பாட்டால் ஏற்படும் வெப்பமடைதல் காரணமாக, புவி வெப்பமடைதலை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வழியே இல்லை என்று நிபுணர்கள் கூறிவந்த போதிலும், 1.5 டிகிரி வரம்புக்கான வாய்ப்பு இன்னும் உள்ளது என்றே ஐநா நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், புவி வெப்பமடைதலால் ஏற்படும் மிக மோசமான பாதிப்புகள் சிலவற்றை தடுப்பதற்கான வாய்ப்பை பூமி இந்து விட்டதாக ஐநா முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. உலகம் தற்போது 1.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வை கொண்டுள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் 1.5 டிகிரி வரம்பைத் தாண்டிவிடும் என ஐநா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘‘பருவநிலை பேரழிவை தவிர்ப்பதற்கான வரம்பை மனிதகுலம் வேகமாக தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது’’ என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறி உள்ளார். ஆனாலும் இது இத்துடன் முடியவில்லை. அதிகப்படியான வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தவும் பின்னர் வெப்பநிலையை ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்பிக்குக் கீழே கொண்டு வரவும் முயற்சிக்க வேண்டும் என விஞ்ஞானிகளும் ஐநா அதிகாரிகளும் பரிந்துரைத்துள்ளனர்.
ஆனாலும், அதிகப்படியான வெப்பமடைதலுடன் உலகம் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்பதால் வானிலை தொடர்பான பேரிடர்கள், கடல் மட்ட உயர்வு, உயிரினங்களின் அழிவு மற்றும் பனிப்பாறைகள் உருகுதல் போன்ற விளைவுகளை தொடரச் செய்யும். ‘‘இது யதார்த்தத்தை உணர்த்தும் ஒரு நிலை. இந்த வெப்பமான உலகத்துடன் நாம் வாழ வேண்டியுள்ளது. ஆனால் வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த நாம் இன்னும் நிறைய செய்ய முடியும்’’ என்று எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானியும் அறிக்கையின் இணை ஆசிரியருமான ரிச்சர்ட் பெட்ஸ் கூறினார்.
வரம்பை மீறிய வெப்பமடைதல் காலத்திற்குப் பிறகு, புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலமும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து அகற்றுவதற்கான வழிகளை உருவாக்குவதன் மூலமும் மீண்டும் வரம்பிற்குக் கீழே திரும்பக் கூடிய புதிய உத்தியை ஐநா பரிந்துரைத்துள்ளது.
என்னென்ன பாதிப்புகள்?
புவி வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியசுக்குள் இருந்தால் சேதம் குறைவாக இருக்கும். அதுவே 2 டிகிரி செல்சியசைக் கடந்தால் வெள்ளம், வறட்சி, கடல் மட்ட உயர்வு, உயிரின அழிவு போன்ற பாதிப்புகள் மிக அதிகரிக்கும். வெப்ப அலைகள் அதிகரிக்கும். கடுமையான வெள்ளம், புயல், வறட்சி அதிகரிக்கும். உணவு உற்பத்தி குறையும். குடிநீர் பற்றாக்குறை தீவிரமாகும். கடல் மட்டம் உயரும். பவளப்பாறைகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் அழியும். பொருளாதார இழப்புகள் அதிகரிக்கும். சில பகுதிகள் வாழத் தகாத இடங்களாக மாறக்கூடும்.
2.6 டிகிரி வரை அதிகரிக்கும்
உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான முக்கிய இலக்குகளைப் பின்பற்றினாலே, நூற்றாண்டின் மத்தியில் புவி வெப்பமடைதல் அதிகபட்சமாக 1.8 டிகிரி என்ற அளவை எட்டும் என்று ஐநா அறிக்கை கூறுகிறது. அரசாங்கங்களின் தற்போதைய கொள்கைகள் தொடர்ந்தால், 2100ம் ஆண்டிற்குள் வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவை விட 2.6 டிகிரி வரை உயரக்கூடும் என்று எச்சரிக்கிறது. எனவே, 1.5 டிகிரி வெப்பமடைதலைத் தடுப்பதற்குப் பதிலாக, அந்த வரம்பைத் தாண்டிய பிறகு அதற்கேற்பச் செயல்பட்டு, பின்னர் நிலைமையைச் சரிசெய்து வெப்பநிலையைக் குறைக்கும் எதிர்காலச் சூழலுக்குத் தயாராகுமாறு கொள்கை வகுப்பாளர்களை ஐநா இப்போது வலியுறுத்துகிறது.



