மனித உருவிலான ரோபோ ஒன்று மனிதர்களை தாக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம்

 

ரஷ்யாவில் உள்ள கடை ஒன்றில் மனித உருவிலான ரோபோ ஒன்று, தன்னைத் தள்ளிய வாடிக்கையாளரைத் தாக்க முயன்றதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள மின்னணு பொருள்கள் விற்பனை நிலையம் ஒன்றில் ‘சியோமா’ என்ற பெயரில் நவீன ரோபோ வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த ரோபோ செயற்கை நுண்ணறிவு மூலம் தகவல்களை பெற்று இயங்கக் கூடியது. கடையில் இருந்தபோது ரோபோவை வாடிக்கையாளர் ஒருவர் திடீரென தள்ளியுள்ளார்.

இதனால் நிலைகுலைந்த ரோபோ சிறிது நேரத்தில் மீண்டும் நிமிர்ந்து, அந்த நபரை நோக்கி நகர்ந்தது. தொடர்ந்து தனது காலை உயர்த்தி அவரை உதைக்க முயன்றதுபோன்ற அசைவுகளைச் செய்தது. நிலைமை மோசமடைவதைக் கண்ட ஊழியர்கள் தலையிட்டு ரோபோவை செயலிழக்கச் செய்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் காட்சி இணையத்தில் வெளியானதும், “இது மனிதர்களுக்கு எதிராக ரோபோக்கள் திரும்பும் காலத்தின் தொடக்கமா?” என்று நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் உண்மையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், மனிதர்களுடன் நேரடியாகச் செயல்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்களின் கட்டுப்பாடு மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளில் அவற்றின் நடத்தை குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. மனிதர்களுக்கு உதவ உருவாக்கப்படும் தொழில்நுட்பமே ஒருநாள் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகவும் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.