அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவை ‘பெரும் சாத்தான்’ என சாடியுள்ள ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா கமேனி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை இலக்கு வைத்துத் தீவிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக ஈரான் கண்ணிவெடிகளை அமைக்க முயன்றதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த எதிர்ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானியப் புரட்சிகரக் காவல் படை ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், வளைகுடா நாடுகளில் அமைந்திருக்கும் உள்கட்டமைப்புகள் மீதும் சரமாரியாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், “எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த நிலப்பரப்பை வழங்கும் எந்தவொரு வளைகுடா நாடும் ஈரானின் நேரடிப் பதிலடிக்கு உள்ளாகும்” என ஈரான் வெளிப்படையாக எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபரின் கையெழுத்து அல்லது வாக்குறுதிகள் எதுவும் நம்பகத்தன்மையற்றவை என்றும் ஈரான் தலைமை கடுமையாகச் சாடியுள்ளது.
இதனிடையே, ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாகத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணை அருகே பிரம்மாண்டமான மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல்களை அமெரிக்க ராணுவம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவின் இந்த நியாயமான தாக்குதலுக்கு ஈரான் மீண்டும் பதிலடி கொடுக்க முயன்றால், இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமான தாக்குதல் காத்திருக்கிறது; அதன் பிறகு ஈரான் என்ற நாடே மிஞ்சாது” எனக் கடுமையான தொனியில் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சர்வதேச கடல்சார் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையின் முழுக் கட்டுப்பாடும் தற்போது அமெரிக்காவின் வசம் உள்ளதாக டிரம்ப் உரிமை கோரியுள்ள போதிலும், இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசித் தாக்கி வருவதால் உலகளவில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மூண்டுள்ள இந்த நேரடி மோதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முழு அளவிலான போராக உருவெடுத்து, உலகப் பொருளாதாரத்தையும் எரிபொருள் சந்தையையும் நிலைகுலையச் செய்துள்ளது.
ஹா – 2 நாட்களில் 2-வது முறையாக ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!
வாஷிங்டன்: சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் இதயப் பகுதியாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை மையம் கொண்டு அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நீரிணைப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளை வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் இலக்குகள் மீது அமெரிக்கப் போர்ப் படைகள் தொடர்ச்சியாக 2-வது நாளாகப் பிரம்மாண்ட மற்றும் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேசக் கடல்வழியில் வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக ஈரான் கடல் கண்ணிவெடிகளை அமைக்க முயன்றதற்கும், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியதற்கும் பதிலடியாகவே இத்தகையக் கடுமையான வான்வழித் தாக்குதல்கள்
நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்கள் மற்றும் தொடர்பு மையங்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகப் பகரைன், குவைத் மற்றும் ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்புகளை நோக்கி ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தித் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. மேலும், ‘எதிரிக்கு மிகப்பெரிய விலையைக்
கொடுப்போம்’ எனக் எச்சரித்துள்ள ஈரான் ராணுவம், ஹார்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை முழுமையாக முடக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வந்த தற்காலிக அமைதி முடிவுக்கு வந்து, மீண்டும் நேரடி மோதல் வெடித்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளது. இரு நாடுகளும் பின்வாங்க மறுத்துத் தீவிர ராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்து உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.



