நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,132 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமான 4,962 பேரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
கடந்த ஆக. 26ம் தேதி நேபாள – திபெத் எல்லையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த கோரத் தாண்டவத்தில் நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் இதுவரை 1,132 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் நேபாளத்தில் மட்டும் 1,050 பேரும், திபெத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 583 வெளிநாட்டினர் உட்பட நேபாளத்தில் 3,916 பேரும், திபெத்தில் 546 பேரும் என மொத்தம் 4,462 பேர் மாயமாகியுள்ளனர். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 275 பேர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 128 பேர் மாயமாகியுள்ள நிலையில், இதுவரை 158 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஆற்றுப்படுகைகளில் திறந்தவெளியில் சிக்கியவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் வெகுவாக மங்கிவிட்டன. அப்படி எவரேனும் மீட்கப்பட்டால் அது அதிசயமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மீட்புப்பணி ஒருங்கிணைப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘திறந்தவெளியில் உள்ள சேறு மற்றும் பாறைகளுக்கு அடியில் எவரேனும் உயிருடன் இருப்பது மிகவும் அரிதான ஒன்று; எனினும் தேடுதல் பணியை நாங்கள் கைவிடவில்லை’ என்று தெரிவித்தார். தற்போது 11 நீர்மின் திட்டப் பகுதிகளில் சுமார் 500 தொழிலாளர்கள் சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அப்பர் திரிசூலி, சிலிமே உள்ளிட்ட நீர்மின் நிலைய சுரங்கப் பாதைகளில் 80 முதல் 90 சதவீதம் வரை பாறைகளும் பற்பசை போன்ற கெட்டியான சேறும் அடைத்துள்ளதால் மீட்புக் குழுவினர் உள்ளே செல்ல பெரும் சவாலைச் சந்தித்து வருகின்றனர்.
சுரங்கப் பகுதிகளில் காற்றுப் பைகள் இருக்கக்கூடும் என்பதால் அங்குள்ளவர்கள் உயிருடன் இருப்பதற்கான கடைசி நம்பிக்கையுடன் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சிலிமே மற்றும் லாங்டாங் பகுதிகளில் நேபாள ராணுவத்துடன் இணைந்து இந்திய நிபுணர் குழுவினர் களமிறங்கியுள்ளனர். அதேபோல் உடல்களை அடையாளம் காண்பதற்காக இந்தியாவிலிருந்து டி.என்.ஏ. சிறப்பு மருத்துவக் குழுவினரும் விரைந்துள்ளனர். இதுகுறித்து நேபாள சுரங்க அமைப்பின் செயலாளர் சத்ரா பகதூர் பஸ்னேத் கூறுகையில், ‘சுரங்கங்களுக்குள் ஆக்ஸிஜன், உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரமும் மிகவும் முக்கியமானது’ என்று தெரிவித்தார். தெர்மல் ட்ரோன்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் மூலம் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஐ.நா சென்று பேச நேபாள பிரதமருக்கு அழுத்தம்
நேபாளத்தின் மோசமான பேரிடரில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும், இமாலய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கு சர்வதேச நிதி திரட்டவும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு நேபாளக் குழுவை பிரதமர் பாலேன் ஷா தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்று ஆளும் ராஷ்ட்ரிய சுவதந்திர கட்சி மற்றும் அரசு வட்டாரங்கள் தீவிர அழுத்தம் கொடுத்து வருகின்றன. முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிஷிர் கனல் தலைமையில் பிரதிநிதிகள் குழு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பிரதமர் நேரில் செல்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவர் ஐ.நா. சென்று சர்வதேச சமூகத்திடம் காலநிலை நீதி மற்றும் பேரிடருக்குப் பிந்தைய மறுசீரமைப்புப் பணிகளுக்கான ஆதரவைக் கோர வேண்டும் என்பதில் அரசு ஒருமனதாக உள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



