களுத்துறை சிறைச்சாலையில் சக கைதியின் காதை வெட்டிய சம்பவம்

 

பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த கைதி உடனடியாகக் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்போது பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காயமடைந்த கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அதன் பின்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.