இலங்கையிடம் பாதுகாப்பு கோரி 20 ஈரானிய கப்பல்கள் எல்லையில்

 

இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே 20 ஈரானிய எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இந்தக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வந்த செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தக் கப்பல்கள் தொடர்பாக இலங்கைக்கு எந்தக் கடமையோ பொறுப்போ இல்லை என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷாரா ரொட்ரிகோ கூறியுள்ளார்.

மேலும், இந்தக் கப்பல்கள் தொடர்பான நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையும் ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் எல்லையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும் பல கப்பல்கள் அந்தப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக இணையத்தளத்தின் சர்வதேச கடற்படை புலனாய்வுப் பகுப்பாய்வு வெளிப்படுத்தியதை தொடர்ந்து குறித்த சர்ச்சை கிளம்பியிருந்தது.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த கப்பல்கள் மீண்டும் ஈரானிய துறைகளுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் இலங்கையை அண்மித்த பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக TankerTrackersஇணை நிறுவனர் சமீர் மதானி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.