மூன்று வெவ்வேறு விபத்துகள்- இரு பெண்கள் உட்பட ஒருசிறுமி உயிரிழந்துள்ளனர்

 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற மூன்று வெவ்வேறு வீதி விபத்துகளில் சிறுமி ஒருவரும் இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

அடம்பன் – விடத்தல்தீவு

அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 10 ஆம் கட்டை வீதியில் பயணித்த டிராக்டர் வண்டியில் மோதி சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பல்லேமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அச்சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 07 வயது சிறுமி ஆவார்.

32 வயதுடைய டிராக்டர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை – ரத்தோட்டை வீதியின் வேரகம பகுதியில் மாத்தளை நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியொன்று, எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது படுகாயமடைந்த முச்சக்கர வண்டிச் சாரதியான பெண் மற்றும் பின்னாலிருந்த குழந்தை மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் புஞ்சி ரத்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஆவார்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஞ்சிக்கடை சந்திக்கு அருகில், துறைமுகப் பகுதியிலிருந்து வந்த டிப்பர் லொறி ஒன்றின் முன் பாதசாரி கடவையைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் டிப்பருடன் மோதி படுகாயமடைந்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்.

டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைில் ஈடுபட்டு வருகின்றனர்.