மீண்டும் தலைதூக்கும் சோமாலியா கடற்கொள்ளையர்கள்? – ஈரான் போர் தாக்கமும் பின்னணியும்
செங்கடலில் வெடிக்கும் போர்ச் சூழலின் எதிரொலி, இந்தியப் பெருங்கடலில் சோமாலியக் கடற்கொள்ளையர்களின் மீள்வருகையாக உருவெடுத்துள்ளது.
நூற்றுக்கணக்கான கடத்தல்கள், ஆண்டுக்கு 7 பில்லியன் முதல் 12 பில்லியன் டாலர் உலகளாவிய பொருளாதார இழப்பு ஆகியவற்றுக்கு காரணமான சோமாலியக் கடற்கொள்ளை முடிவுக்கு வந்துவிட்டது என்று உலகம் நினைத்த நிலையில், அது மீண்டும் ஒரு புதிய நிழல் உலகப் போராக உருவெடுத்துள்ளது.
ஈரான் போரின் தாக்கத்தால், அமைதியாக இருந்த சோமாலியக் கடற்பகுதியில் அதிவேகப் படகுகளின் ஊடுருவலும், கப்பல் கடத்தல்களும் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம், கடந்த 21-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ‘ஏமன் மற்றும் சோமாலியக் கடற்பகுதிகளில் 22 இந்திய மாலுமிகள் இருந்த ‘எம்.டி.சிபு’ (MT Sibu 1) என்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மற்றும் கேமரூன் கொடியுடைய ‘எம்.வி.லூருஃப்’ (MV Luruf) ஆகிய இரு வணிகக் கப்பல்களைச் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். லூருஃப் கப்பலையும் அதன் பணியாளர்களையும் விடுவிக்க 2 மில்லியன் டாலர் பிணைத்தொகை கோரப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த கடற்கொள்ளை, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பதற்றத்தால் மீண்டும் புதிய நிழல் உலகப் போராக மாறியுள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே மிகவும் வறுமைமிக்க நாடு சோமாலியா. தொடக்கத்தில் இருந்து இங்கு பல்வேறு முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்தபோதிலும், யாரும் மக்களின் நலனுக்காக எந்தத் திட்டத்தையும் உருவாக்கவில்லை. 1991-ல் சோமாலிய அரசு வீழ்ச்சியடைந்தபோது அந்நாட்டின் கடற்படையும் இல்லாமல் போனது. பாதுகாப்பற்ற சோமாலியக் கடற்பரப்பில் வெளிநாட்டுக் கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிக்கவும், அபாயகரமான கழிவுகளைக் கொட்டவும் தொடங்கின.
அதன்பின் அமெரிக்காவின் ஆதரவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு அதிபரும் பிரதமரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏராளமான வளங்கள் இருந்தும் இன்னும் அந்நாட்டு மக்கள் உலகளவில் மோசமான வறுமையில்தான் வாழ்கிறார்கள். உலகிலேயே பின்தங்கிய நாடாகச் சோமாலியா இன்னும் இருந்து வருகிறது. கால்நடை வளர்ப்பு மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் சோமாலியர்கள் அனுப்பும் பணமே அந்நாட்டின் பிரதான வருமானமாக இருக்கின்றன.
2013-ம் ஆண்டில் உலக வங்கி வெளியிட்ட ஆய்வின்படி, ‘வெளிநாட்டுச் சுரண்டலால் வாழ்வாதாரத்தை இழந்த சோமாலிய மீனவர்கள் தங்களின் கடலைப் பாதுகாக்கவும் இழப்பீடு கோரவும் ஆயுதம் ஏந்தி வெளிநாட்டுக் கப்பல்களைச் சிறைபிடிக்கத் தொடங்கினர். ஆனால், இதில் பெரும் பணம் கிடைப்பதைக் கண்டதும், இதுவே பிற்காலத்தில் ஒரு மாஃபியா தொழிலாக உருவெடுத்தது.
சோமாலியா, ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகவும் வறுமை வாடும் நாடு. வறுமை, வேலையின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் கடல் வளங்கள் குறைவு ஆகியவையே இளைஞர்களைக் கடற்கொள்ளையை நோக்கித் தள்ளின. 1990-களில் மட்டும் சர்வதேச நிறுவனங்கள் சோமாலியக் கடல் வளங்களிலிருந்து 300 மில்லியன் டாலர் அளவுக்குக் கொள்ளையடித்தனர்’ என்று தெரிவித்துள்ளது.
இதற்கு பின்னணியில் உள்ள நிதியாளர்கள் பெரிய ‘தாய்க்கப்பல்’ (Mother Ship), அதிவேகப் படகுகள், ஏ.கே.47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ரேடார்கள் மற்றும் ஜி.பி.எஸ் கருவிகளை வழங்குகின்றனர்.
கடற்பகுதியை நன்கு அறிந்த மீனவர்கள், ஆயுதங்களைக் கையாளும் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தொழில்நுட்பம் அறிந்த இளைஞர்கள் இதில் குழுவாகவோ அமைப்பாகவோ இயங்குகின்றனர்.
பிணைப்பணம் கிடைத்தால் 30 சதவீதம் முதலீட்டாளர்களுக்கும், 30 சதவீதம் தாக்குதல் குழுவிற்கும், 20 சதவீதம் உள்ளூர் பழங்குடித் தலைவர்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. கீழ்மட்டக் கொள்ளையர்களுக்கு நிலையான கட்டணமும் கிடைக்கிறது.
சோமாலியாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் கொள்ளையர்கள் ஆடம்பர பங்களாக்கள், கார்களுடன் வளம் வருவதால், வறுமையில் வாடும் இளைஞர்கள் கடற்கொள்ளையை ஒரு ‘அதிர்ஷ்ட வாய்ப்பாக’ கருதுகின்றனர்.
2011-ம் ஆண்டிலிருந்து அடுத்த வந்த 5 ஆண்டுகளில் 237 தாக்குதல்கள் மூலம் 160 மில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டது. சர்வதேச வர்த்தகத்துக்கு இதனால் ஆண்டுக்கு 7 பில்லியன் முதல் 12 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படுகிறது.
2012-க்கு பின் சோமாலியா, சர்வதேச கடற்படை அமைப்பு இடையே ஏற்பட்ட உடன்படிக்கைகளால் கடற்கொள்ளை குறைந்திருந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கிறது. இதற்கு முக்கியக் காரணங்கள்:
ஏமன் ஹவுதி படைகளின் தாக்குதலையும், ஈரான் பதற்றத்தையும் சமாளிக்க அமெரிக்க, ஐரோப்பிய கடற்படைகள் செங்கடலுக்குத் திருப்பி விடப்பட்டதால், சோமாலியக் கடற்பகுதியில் கண்காணிப்பு குறைந்துள்ளது.
அல்-கொய்தாவின் ‘அல்-ஷபாப்’ மற்றும் ஏமனின் ஹவுதி அமைப்புகளுடன் கொள்ளையர்கள் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தையும் ஆயுதங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
பாப்-எல்-மண்டேப் வழியைத் தவிர்க்க வணிகக் கப்பல்கள் ஆப்பிரிக்காவின் ‘நன்னம்பிக்கை முனை’ வழியாகச் சுற்றுப்பாதையில் செல்வதால், சோமாலியக் கடற்பகுதியில் பாதுகாப்பில்லாத கப்பல்கள் எளிய இலக்குகள் ஆகின்றன.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதிகப் பிணைப்பணம் பெற எண்ணெய் கப்பல்களைக் கொள்ளையர்கள் இலக்கு வைக்கின்றனர்.
கப்பல்களில் முள்வேலி அமைத்தல், அதிவேக நீரைப் பீய்ச்சியடித்தல், ‘பாதுகாப்பு அறை’ உருவாக்குதல் மற்றும் ஆயுதங்கள் ஏந்திய தனியார் பாதுகாவலர்களை அமர்த்துவது பாதுகாப்பைத் தரும்.
மேலும், இந்தியாவின் ‘ஆப்பரேஷன் சங்கல்ப்’, ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘ஆப்பரேஷன் அட்லாண்டா’ போன்ற கடற்படை ரோந்துகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இருப்பினும், சோமாலியாவில் நிலையான அரசை அமைத்து, பின்னணியில் இயங்கும் மாஃபியா முதலீட்டாளர்களைக் கைது செய்வதே இதற்கான நிரந்தரத் தீர்வாகும்.



