இந்தோனேசியா ..சுவிஸ் சுற்றுலா பயணிக்கு .. ஓராண்டுசிறை

 

இந்தோனேசியாவின் பாலி தீவில் கடைப்பிடிக்கப்படும் நெய்பி எனப்படும் மௌன தினத்தின் விதிமுறைகளை மீறி, அந்த சடங்கை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட சுவிஸ் நாட்டை சேர்ந்த 26 வயது சுற்றுலா பயணிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான லூசியன் ஆண்ட்ரின் ஸ்க்ராகன், நெய்பி தினத்தன்று கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு யாரும் இல்லாததையும், முழுவதும் இருட்டாக இருப்பதையும் வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் ஆபாச வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பாலி மக்களிடையே கடும் எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

நெய்பி தினத்தில் பாலி தீவு முழுவதும் 24 மணி நேரம் அமைதியாக இருக்கும். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. மின்சார பயன்பாடு, இணைய சேவை உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்படுவதுடன், விமான நிலையமும் மூடப்படும். மதத்தை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளும் இந்த விதிமுறைகளை மதிக்க வேண்டும்.

தனது செயலின் தீவிரத்தை புரிந்துகொள்ளவில்லை என்றும், யாரையும் அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்த ஸ்க்ராகன், பாலி மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.