1 டாலர்=17 கோடி ரியால் ஈரான் கரன்சி மதிப்பு வரலாறு காணாத சரிவு

 

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கிடையே, ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானுக்கு எந்த வகையிலும் உதவி செய்யும் நாடுகள் மீது தடை விதிப்பது உட்பட இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தடைகளை டிரம்ப் விதிக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே அமெரிக்க கடற்படையின் முற்றுகையால் ஈரானின் எண்ணெய் வர்த்தகம் முடங்கியிருக்கும் நிலையில், புதிய பொருளாதார தடைகள் ஈரான் பொருளாதாரத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சூழலில் நேற்று கரன்சி சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போது, அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு 2.02 மில்லியன் டாலராக (சுமார் ரூ.17 கோடி) வரலாறு காணாத சரிவை எட்டியது. அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஈரான் மக்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 6 மாதத்திற்கு முன் போர் தொடங்கியதில் இருந்து அரிசியின் விலை 60 சதவீதமும், மாட்டிறைச்சியின் விலை 150 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கும் முயற்சியாக பாகிஸ்தான் முப்படை தலைமை தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் நேற்று ஈரான் சென்றார். டெஹ்ரானில் அவர் ஈரான் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அவருடன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வியும் உடன் சென்றுள்ளார்.