இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 100% வரி?: டிரம்புக்கு அதிகாரமளித்து நாடாளுமன்றம்

 

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதாவிற்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீதான போர் 5வது ஆண்டாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் அமெரிக்க செனட் சபையில் புதிய மசோதா கொண்டு வரப்பட்டது. உக்ரைனுக்கு தீவிர ஆதரவாளராக இருந்து கடந்த ஜூலை 11ம் தேதி காலமான குடியரசு கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் நினைவாக இந்த மசோதாவிற்கு பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவாகி, பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. உக்ரைன் மக்களுக்கு ஆதரவாகவும், ரஷ்ய அதிபர் புடினின் ராணுவ நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் படி, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் முன்னணி 5 நாடுகளான இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அதிபர் டிரம்பிற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அதேவேளையில், தங்கள் நாட்டின் இயற்கை எரிவாயு தேவையில் 15 சதவீதத்திற்கும் குறைவாக ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து, அதை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கும் நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து ஜனநாயக கட்சி எம்பி ரிச்சர்ட் புளூமெந்தால் கூறுகையில், ‘ரஷ்ய மீதான தடைகள் மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம், உக்ரைன் மக்களுக்கு நாங்கள் பின்னணியில் உள்ளோம். உக்ரைனை ஒருபோதும் நீங்கள் (புடின்) கைப்பற்ற முடியாது என்று எச்சரிக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

மேலும், ரஷ்ய அதிபர் புடின், மூத்த அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள், அந்நாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி திட்டங்கள் மீதும் தடைகளை நீட்டிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. ரஷ்யா தனது எரிபொருள் வருவாயை காப்பாற்ற பயன்படுத்தும் பழைய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீதும் தடைகள் விரிவாக்கப்படும்.

நாட்டின் நலன் கருதி தேவைப்பட்டால் இந்த தடைகளில் இருந்து விலக்கு அளிக்கும் அதிகாரம் வெள்ளை மாளிகைக்கு வழங்கப்பட்டுள்ளது. செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, வரும் 31ம் தேதி கூடும் பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. இதுமட்டுமின்றி 1996ம் ஆண்டின் ஈரான் தடைகள் சட்டத்தின் காலாவதி தேதியை 2031ம் ஆண்டு வரை நீட்டிக்கவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய மசோதாவால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்க வழிவகை ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.