அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், தகுந்த பதிலடி கொடுக்க முழுமையாக தயாராக இருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நீடித்து வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி 6 மாதங்கள் கடந்துவிட்டன. இந்த போரினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், ஈரானை கட்டுப்படுத்த பொருளாதார அழுத்தத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஈரானின் பொருளாதார உயிர்நாடியை முடக்கும் நோக்கில் அந்நாட்டின் 60 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் வர்த்தக கப்பல்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் அறிவித்தார். மேலும் ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் சர்வதேச டாலர் பரிவர்த்தனை முறையில் இருந்து நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவின் இந்த புதிய பொருளாதார நடவடிக்கைக்கு ஈரான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், ராணுவ ரீதியாகவும் சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை குறைத்தும் நேரடி பதிலடி கொடுக்கப்போவதாக எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஈரான் பொருளாதார அமைச்சர் அலி மதனிசாதே அளித்த பேட்டியில், ‘அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்த உத்தரவை ஏற்கவில்லை. எதிரிகள் பொருளாதார தீவிரவாத தாக்குதலை நடத்த முற்பட்டால், எங்களது தற்காப்பு நடவடிக்கை இனி வெறும் தற்காப்பாக மட்டும் இருக்காது; நாங்கள் நடத்தும் கடுமையான எதிர்த்தாக்குதலுக்கு எதிரிகள் காத்திருக்க வேண்டும்’ என்று ஆவேசமாக தெரிவித்தார்.



