நீடித்த ரஷ்ய-உக்ரேன் யுத்தம்!

 

உக்ரேன்- − ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளன. இரு நாடுகளும் பாரிய அழிவுகளை எதிர்கொண்டுள்ளன. உக்ரேனில் மக்கள் இடம்பெயர்வது மற்றும் கொல்லப்படுவது போன்ற அவலங்கள் அதிகரித்துள்ளன.

ரஷ்யாவின் தலைநகரை நோக்கிய உக்ரேனின் தாக்குதல்கள் ரஷ்யாவுக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் விட்டாலும், ரஷ்யாவின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களிலிருந்து உயிர்தப்பிக் கொள்வதற்காக உக்ரேன் மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர். உக்ரேனின் மொத்த சனத்தொகையில் கணிசமான பங்கினர் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இத்தொகையானது கொல்லப்பட்டவர்களை விட பல மடங்கு அதிகம் என்று கணிப்பிடப்படுகிறது.

உக்ரேன் நாட்டில் வளங்கள் அழிக்கப்படுகின்றன. உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியாமல் உள்ளனர். தாக்குதல்கள் உக்கிரமடைவதால் மக்கள் அதிகளவில் வெளியேறி வருகின்றனர்.

தொடரும் போரின் காரணமாக இதுவரை சுமார் 10 மில்லியன் உக்ரேன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில், ஏறத்தாழ 3.7 முதல் 3.9 மில்லியன் பேர் உக்ரேனுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர். சர்வதேச எல்லைகளைக் கடந்து ஏறத்தாழ 5.9 மில்லியன் அகதிகள் வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்.

அவ்வாறு வெளியேறியவர்கள் மேற்கு ஐரோப்பாவிலுள்ள நாடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் உக்ரேன் இராணுவ ரீதியில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. மக்களின் வெளியேற்றம் போர் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி வருகிறது. உள்நாட்டு கட்டமைப்புகளை மீளமைக்க முடியாமல் அந்நாடு திண்டாடுகின்றது. ஐரோப்பிய நாடுகளின் ஆயுதங்களைக் கொண்டே போரை உக்ரேன் நடத்தி வருகிறது.

உக்ரேன் ஜனாதிபதிக்கு எதிராக தீவிர எதிர்ப்புப் போராட்டங்கள் உள்நாட்டில் தொடங்கியிருக்கின்றன. ஏற்கனவே உக்ரேனின் பாதுகாப்பு அமைச்சர் மைக்லோ பெரடோவை பதவி நீக்கியதில் தொடங்கிய போராட்டம் தற்போது ஆட்சி மாற்றத்திற்கான அறைகூவலாக மாறிவருகிறது.

போரை நீடிப்பது தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான உத்தி என்றே உக்ரேனிய மக்கள் கருதுகின்றனர். பெரும்பாலான உக்ரேனிய மக்கள் போரற்ற சமாதானமான சூழலையே விரும்புகின்றனர்.

 

அமைதிச் சூழலுக்கான தடையாக உக்ரேன் ஜனாதிபதியின் மேற்குலக சார்பு ஆட்சியே உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் உள்நாட்டில் பாரிய குழப்பங்களும் நெருக்கடிகளும் ஆட்சிக்கு எதிராக ஏற்பட்டிருக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்துகின்ற விதத்தில் போரை வெற்றி கொள்ளச் செய்வதில் யெலன்ஸ்கி முனைப்பு காட்டி வருகின்றார்.

ஆனால் அந்தப் போரை வெல்வது கடினமானது என இராணுவ ஆய்வாரள்கள் கணிப்பீடு செய்கின்றனர். போரின் மூலம் ரஷ்யாவை வெல்வது கடினமானது என்ற கருத்து காணப்படுகிறது.

ஆனால் தற்போதைய ஆட்சியாளர் விளாடிமிர் புட்டினுக்குப் பின்னர் ரஷ்யாவின் நிலைமை பற்றி மேற்குலக ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளன. ஆனாலும் புட்டின் தனக்குப் பின்னரான ஆட்சியாளர்களை அடையாளம் காட்டுவதில் கவனம் கொண்டுள்ளார். இதனால் உக்ரேன்- ரஷ்யப் போரானது ஐரோப்பாவுக்கு நீடித்த நோயாக மாறுவதற்கான ஆபத்து காணப்படுகிறது. இப்போரை ஐரோப்பியர்களும், அவர்கள் சார்ந்த ஏகாதிபத்திய சக்தியினருமே வழிநடத்துகின்றனர்.

இப்போரானது ஐரோப்பாவுக்கு அதன் பொருளாதாரத்துக்கும், இராணுவ தொழில்நுட்பத்துக்கும் பாரிய சவாலானதாக மாறியுள்ளது.

ரஷ்யாவைப் பொறுத்தவரை அதன் உள்நாட்டுப் பொருளாதாரம் பலமானதாகக் காணப்படுகிறது. அதன் நட்பு நாடுகள் வலுவான பொருளாதார ஒத்துழைப்பை வழங்குகின்றன.

இந்தியாவுடனும் சீனாவுடனும் கொண்டிருக்கின்ற வர்த்தக ரீதியான நெருக்கம், வடகொரியாவுடன் கொண்டிருக்கும் இராணுவ ரீதியான உறவு அந்நாட்டைப் பாதுகாத்து வருகிறது. போரற்ற சமாதானத்துக்கான எந்த முனைப்பையும் தற்போது ஆட்சியில் உள்ள புட்டின் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக மேற்குலக ஊடகங்கள் விவாதிக்கின்றன.

ரஷ்ய- உக்ேரனின் போரின் பாதிப்புகள் ஈரான்- − அமெரிக்கப் போரில் விளைவுகளை தரக்கூடியது. ஈரான் மீதான அமெரிக்காவின் போர் மறுபுறத்தில் உக்ரேன்- − ரஷ்யப் போரினை பாதிக்கச் செய்வதாக நோக்கப்படுகிறது.

இரண்டின் பாதிப்புகளும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்துக்கே அதீதமான விளைவுகளைத் தருவதாகத் தெரிகின்றது. ஒன்றில் ஒன்று தங்கி இருக்கின்ற சூழலில்இப்போர் பாரியநெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் உக்ரேனின் நெருக்கடி, மறுபக்கம் அமெரிக்க நெருக்கடி என்று மேற்குலகமே அதிகமான இழப்புகளை சந்தித்து வருகிறது.

ஈரான் ரஷ்யாவில் மட்டுமன்றி தனது சுய தொழில்நுட்பத்திலும் சீனாவின் ஆயுத தளபாட மற்றும் தகவல் தொழில்நுட்பத்திலும் தங்கி இருப்பதோடு, மேற்குலக நாடுகளையோ அல்லது வேறு ஏதாவது ஒரு நாட்டிலோ தங்கியிருக்காத நிலைமை காணப்படுகிறது.

ஆனால் உக்ரேன் முழுமையாக அமெரிக்காவிடமும் மேற்குலக நாடுகளிடமுமே தங்கியுள்ளது. இப்போரானது உலகளாவிய இராணுவ ரீதியான நெருக்கடியையும் ஏற்படுத்தக் கூடியதாக மாற வாய்ப்புள்ளது.