வாஷிங்டனையே மாற்றும் முயற்சியா?சீன அதிபர் அமெரிக்க பயணம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தொடர்ந்து பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வெள்ளை மாளிகையின் பின்புற புல்வெளியில் புதிய பிரம்மாண்டமான ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளை மாளிகை புல்வெளியில் மேற்கொள்ளப்படும் இந்தப் புதிய கட்டுமானம் முதல், வாஷிங்டனில் உள்ள பூங்காக்கள் மற்றும் பிற முக்கிய இடங்களைப் புதுப்பிக்கும் திட்டங்கள் வரை டிரம்பின் கட்டுமானங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் தொடர்ந்து பல்வேறு கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். 2028ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி அமெரிக்க அதிபர்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய அரசியலமைப்பு வரம்புகளின்படி மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலில், தனது பதவிக்காலம் முடிவதற்குள் வெள்ளை மாளிகை மற்றும் வாஷிங்டன் நகரில் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற நோக்கில் ட்ரம்ப் இத்தகைய பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

வெள்ளை மாளிகையில் பிரம்மாண்ட ஹெலிபேட்
கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையின் பின்புறம் உள்ள புல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய, பிரம்மாண்டமான ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளத்தை ட்ரம்ப் பத்திரிகையாளர்களுக்கு காட்சிப்படுத்தினார். இது‘மரைன் ஒன்’ ஹெலிபேட் என குறிப்பிடப்படுகிறது.

ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும்போது அவற்றிலிருந்து வெளியாகும் அதிகப்படியான வெப்பத்தால் புல்வெளி பாதிக்கப்படாமல் இருக்க, கிரானைட் கற்களால் அமைக்கப்பட்ட தரையிறங்கும் தளம் அவசியம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆரம்பகட்டத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளங்கள் மிகவும் சரிவான பாதையில் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அதனை மீண்டும் சரிசெய்யுமாறு ட்ரம்ப் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் நீடித்து வரும் கடுமையான போர் பதற்றம் காரணமாக உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதே நேரத்தில், கிரீன்லாந்து, வெனிசுலா, ஈரான் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச அளவில் அமெரிக்காவின், குறிப்பாக அதிபர் ட்ரம்பின் செல்வாக்கு குறைந்துள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில்தான் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசியட்ரம்ப்,தனக்குத் தெரிந்த ஒரே விஷயம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதுதான் என்ற வகையில் புத்துணர்ச்சியுடன் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வரும் செப்டம்பர் 24ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது வருகைக்கு முன்பாக வெள்ளை மாளிகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புதிய ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளம் அமைக்கப்பட்டுள்ள வெள்ளை மாளிகையின் பின்புற புல்வெளி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

1974ஆம் ஆண்டு அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகிய பின்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய நிகழ்வும் இந்தப் பகுதியில் நடைபெற்றது. மேலும், 1993ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) இடையே கையெழுத்தான ஓஸ்லோ ஒப்பந்தத்துடன் தொடர்புடைய முக்கிய நிகழ்வுகளும் வெள்ளை மாளிகை புல்வெளியில் நடைபெற்றன.

2029 ஜனவரியில் ட்ரம்பின் தற்போதைய பதவிக்காலம் முழுமையாக முடிவடைவதற்குள், வாஷிங்டன் நகரை தனது பார்வைக்கும் முத்திரைக்கும் ஏற்ப மாற்றியமைக்க அவர் முயற்சி செய்து வருவதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

லிங்கன் நினைவுச் சின்னத்தின் எதிரே உள்ள நீர்த்தடாகம்மற்றும் பிற பூங்காக்களைப் புதுப்பித்தல், வெள்ளை மாளிகையில் நடன அரங்கை உருவாக்குதல், வெற்றி வளைவு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளிலும் ட்ரம்ப் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால், வெறும் நிர்வாகப் பணிகளைத் தாண்டி, தனது பதவிக்காலம் முடிவதற்குள் வாஷிங்டனின் முக்கிய அடையாளங்களிலும் வெள்ளை மாளிகையிலும் தனது கட்டுமானத் தடத்தைப் பதிக்க ட்ரம்ப் முயற்சி செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.