ஏற்கனவே மாநிலம் முழுக்க சட்டம் ஒழுங்கு பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே உள்ள பழைய சிறைச்சாலை குடியிருப்பு பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கத்திக்குத்து சம்பவமாக மாறியது. ஒருவரை ஓட ஓட கத்தியால் வெட்டியதுடன், அந்த வழியாக சென்ற இளைஞர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. கத்திகளுடன் கும்பல் துரத்திச் சென்றதால் பொதுமக்கள் அச்சத்தில் ஓடிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே உள்ள பழைய சிறைச்சாலையில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரியம் இரு தரப்பினரிடையே அருகே ஏற்பட்ட வெறும் வாய்த் தகராறு, கத்திக்குத்து சம்பவமாக மாறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பு, இமான், கார்த்திக் ஆகிய மூன்று பேரை யானைகவுனி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 16ஆம் தேதி இரவு, நகர்புற வாழ்விட குடியிருப்பில் வசிக்கும் அப்பு, இமான், கார்த்திக் ஆகியோர் வீட்டருகே சாலையில் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வள்ளுவர் நகரை சேர்ந்த ரித்தீஷ் என்றஇளைஞர் இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வேகமாக சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மூவரும் ரித்தீஷை வழிமறித்து, குடியிருப்பு பகுதியில் ஏன் வேகமாக செல்கிறாய் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு சுமார் இரவு 10 மணியளவில் உணவு வாங்கிவிட்டு அப்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ரித்தீஷ் தனது வாகனத்தில் வந்து அப்புவின் இருசக்கர வாகனத்தில் மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் அப்புவின் வாகனம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, ரித்தீஷ் தனது நண்பர்களுடன் அப்பகுதிக்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அங்கு இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
வாக்குவாதத்தின் போது விஜய் என்பவர் கத்தியை எடுத்து கோவிந்தன் என்பவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பு, இமான், கார்த்திக் உள்ளிட்டோர் விஜயை துரத்திச் சென்று கத்தியால் தாக்கியுள்ளனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றஏழு கிணறு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞரும் இந்த கும்பலின் தாக்குதலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலால் அப்பகுதியில் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகளால் பரபரப்பு
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் யானைகவுனி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த அப்பு, இமான், கார்த்திக் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.



