ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதியின் மதினா நகரில் மின் நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்

 

சவூதி அரேபியாவின் புனித நகரங்களில் ஒன்றான மதினாவில் அமைந்துள்ள மின் விநியோக நிலையம் ஒன்றின் மீது யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாகச் சவூதி தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.

நபிகள் நாயகம் அடக்கம் செய்யப்பட்ட ‘மஸ்ஜிதுன் நபவி’ பள்ளிவாசல் அமைந்துள்ள மதினா நகரின் மீது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலுக்குத் துருக்கி, சூடான் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நாடுகள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி அதிகாலை 5:11 மணியளவில் மதினாவிலுள்ள ‘தைபா’ மின் விநியோக நிலையத்தின் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் ஒன்று மோதித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலினால் மின் விநியோக நிலையத்தின் ஒரு மின்மாற்றி சேதமடைந்து செயலிழந்த போதிலும், பிரதான மின் வலைப்பின்னலுக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த கட்டமைப்பு மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கும் மின்சாரம் விநியோகிக்கும் பிரதான நிலையமாகும் எனவும், இரு புனித தலங்களை இலக்கு வைக்கும் தீவிரவாத நடவடிக்கைகளின் தொடர்ச்சியே இதுவென்றும் சவூதி கூட்டணி ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும், புனித தலங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களுக்குத் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஹவுதி கிளர்ச்சி அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சவூதியின் இறையாண்மைக்கும், இஸ்லாமிய உலகின் புனித மதிப்புகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இத்தகைய தூண்டுதல் தாக்குதல்கள் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்தப்பட வேண்டும் என துருக்கி வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

சவூதியின் பாதுகாப்பு மற்றும் புனித தலங்களைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தனது முழுமையான ஆதரவைச் சூடான் அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஓகஸ்ட் மாதம் மக்காவில் சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தான ‘மும்முனை பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்’ நடைமுறையிலுள்ள சூழலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.