சதிகார விமானியின் தற்கொலைப் படை தீவிரவாத செயல் அம்பலம்

 

விமானத்தை மோதவிட்டு 182 பேரை கொலைல முயற்சி ; சதிகார விமானியின் தற்கொலைப்படை தீவிரவாத செயல் அம்பலம்: அமெரிக்கா, சவூதி, இஸ்ரேல், ஓமனின் கூட்டு விசாரணையில் திடுக் தகவல்
நடுவானில் பறந்த விமானத்தைக் கடத்தி பயணிகளைக் கொல்ல முயன்ற கொடூர இணைவிமானியை சவூதி அரேபியா கைது செய்து ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைத்துள்ளது. இவ்விவகாரத்தில் கூட்டு விசாரணை தொடங்கிய நிலையில், ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரை நோக்கி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் பெரும்பாலான இஸ்ரேலியர்கள், இந்தியர்கள், அமீரகத்தினர் மற்றும் 4 அமெரிக்கர்கள் உட்பட மொத்தம் 182 பேர் பயணம் செய்தனர். அப்போது நடுவானில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், சில நிமிடங்களிலேயே சுமார் 16 ஆயிரம் அடி கீழே செங்குத்தாகப் பாய்ந்தது. இதனால் நடுவானில் மரண பயத்தில் பயணிகள் அலறினர். உடனே துரிதமாகச் செயல்பட்ட தலைமை விமானி மற்றும் பயணிகள், விமானத்தை சவூதி அரேபியாவின் தபூக் நகரில் அவசரமாகத் தரையிறக்கி பெரும் விபத்தைத் தவிர்த்தனர்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணியில் நடந்த கொடூர விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. விமானம் நடுவானில் பறந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த இணைவிமானி திடீரென வெறிச்செயலில் இறங்கியுள்ளார். அவர் இந்தியாவைச் சேர்ந்த தலைமை விமானி ஸ்மித் மச்சார் என்பவரைக் கொடூரமாகத் தாக்கி கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நிலையிலும் தனது மன உறுதியை கைவிடாத இந்திய விமானி, ‘காக்பிட்’ கதவை அவசரமாகத் திறந்து பயணிகளிடம் உதவி கோரினார். உடனடியாக உள்ளே பாய்ந்த பயணிகள், வெறிபிடித்துக் கிடந்த இணைவிமானியைத் தாக்கி மடக்கிப் பிடித்தனர். பின்னர் இயர்போன் ஒயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பட்டைகளால் அந்த கொடூரனின் கைகளைக் கட்டிப் போட்டு விமானத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அந்த விமானம் தபூக் நகரில் அவசரமாகத் தரையிறங்கியதும் அந்த சதிகார இணை விமானியை சவூதி போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இஸ்லாமிய தீவிரவாத சிந்தனைகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு விமானத்தை ஒட்டுமொத்தமாக மோதி அழிக்க முயன்றது தெரியவந்துள்ளது. ‘என்னை உடனே கொன்று விடுங்கள்’ என்று விமான ஊழியர்களிடம் அவர் வெறித்தனமாகக் கூச்சலிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் யூதர்களைக் கொல்ல வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அவர் விஷமக் கருத்துகளைப் பதிவிட்டதும் அம்பலமானது. இந்நிலையில், விமானம் பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டின் சட்ட விதிகளின்படி, கைது செய்யப்பட்ட சதிகாரனை சவூதி அரேபிய அதிகாரிகள் ஐக்கிய அரபு அமீரகத்திடம் முறைப்படி ஒப்படைத்துள்ளனர்.

நடுவானில் ஆபத்து ஏற்பட்டபோது காக்பிட்டிலிருந்து ‘7700’ என்ற அவசர கால குறியீடும், அதைத் தொடர்ந்து விமானம் கடத்தப்படுவதைக் குறிக்கும் ‘7500’ என்ற எச்சரிக்கைக் குறியீடும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில், ‘இந்த கொடூரத் தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதில் ஈரானின் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்நாட்டின் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்’ என்று பகிரங்கமாக எச்சரித்தார்.

மறுபுறம், இந்த தீவிரவாத சதி தொடர்பாக ஓமன், அமெரிக்கா, சவூதி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து தீவிர கூட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சதிகார இணை விமானியை தங்களிடம் ஒப்படைக்குமாறு இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது. தன் உயிரைப் பணயம் வைத்து 182 அப்பாவி பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார், தற்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் பெற்று வருகிறார். நடுவானில் நடந்த இந்த கொடூரக் குற்றத்திற்கு காரணமான சதிகாரன் மற்றும் அவனுக்குப் பின்னணியில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு சர்வதேச அமைப்புகள் மூலம் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் வலுத்துள்ளது.

தீவிரவாத வெறியில் இணைவிமானி;

விமானத்தை மோதி அழிக்க முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த சதிகார இணைவிமானி குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட இணைவிமானி இஸ்லாமிய தீவிரவாத கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார் என்பது அவரது தனிப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பயணிகள் மற்றும் ஊழியர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டபோது, அந்த சதிகாரன் ‘என்னை கொன்று விடுங்கள், என்னை கொன்று விடுங்கள்’ என்று வெறித்தனமாகக் கூச்சலிட்டுள்ளான். இதிலிருந்தே அவன் தற்கொ*ப்படை தாக்குதல் போல விமானத்தை கீழே மோதி வீழ்த்தவே திட்டமிட்டான் என்பது தெளிவாகிறது’ என்று கூறினார்.

உளவுத்துறை கோட்டை விட்டதா?

ஓமன் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே முறையான தூதரக உறவுகள் இல்லாத நிலையில், இஸ்ரேல் செல்லும் விமானத்தில் ஓமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை இணைவிமானியாக எப்படி அனுமதித்தார்கள் என்ற பாதுகாப்பு கேள்வி எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இஸ்ரேல் வரும் அனைத்து விமானப் பணியாளர்களையும் இஸ்ரேலின் ‘ஷின் பெட்’ உளவு அமைப்பு தீவிரமாகப் பரிசோதிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது, இந்த கொடூர சதிகார இணை விமானி எப்படி தப்பினார் என்பது குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. இதற்கிடையே, சவூதியில் சிறை வைக்கப்பட்டிருந்த அந்த தீவிரவாத இணை விமானி அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்டு, அமீரக அரசின் தீவிர விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

விமானத்தின் தலைமை விமானியான இந்தியாவின் ஸ்மித் மச்சார் மீது கொடூர இணைவிமானி திடீரென கத்தியால் வெறித்தனமான தாக்குதல் நடத்தினான். ஸ்மித் மச்சாரின் கழுத்து, கை மற்றும் மண்டையோட்டின் பின்பகுதியில் ஆழமான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டு அடித்தது. ‘காக்பிட்’ அறை முழுவதும் ரத்தக் காடாக மாறியது. உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மன உறுதியை கைவிடாத அந்த இந்திய விமானி, சாதுரியமாக ‘காக்பிட்’ கதவை அவசரமாகத் திறந்து பயணிகளிடம் உதவி கோரினார். அப்போது அவர், ‘என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள், நான் இங்கே சாக விரும்பவில்லை’ என்று கதறியபடி சுருண்டு விழுந்தார். ‘காக்பிட்’ கதவு திறக்கப்பட்டதும் ஒரு பெண் பயணி ‘கத்தி… கத்தி…’ என்று மரண ஓலமிட்டார். உடனடியாக ஜார்ஜியாவைச் சேர்ந்த 47 வயது பல் மருத்துவரான ஷோதா முசாவேவ் தலைமையில் 4 பயணிகள் மின்னல் வேகத்தில் காக்பிட்டுக்குள் பாய்ந்தனர். அந்த சதிகார இணைவிமானியின் கழுத்தை நெரித்துப் பிடித்து தரையில் வீழ்த்தினர். இயர்போன் வயர்கள் மற்றும் துணிகளைக் கொண்டு அவனது கை, கால்களைப் பிணைத்துக் கட்டினர். அப்போது அந்த வெறி பிடித்த தீவிரவாதி, ‘என்னை உடனே கொன்று விடுங்கள், என்னை விட்டு வைக்காதீர்கள்’ என்று வெறித்தனமாகப் பலமுறை கூச்சலிட்டான்.இந்திய சுற்றுலா

பயணிகள் தீவிரவாதியை மடக்கிய அதே நேரத்தில், மரண விளிம்பில் துடித்த இந்திய கேப்டனுக்கு மருத்துவர் ஷோதா முசாவேவ் உடனடியாக முதலுதவி செய்தார். விமானத்தில் முதலுதவி பெட்டி பற்றாக்குறையாக இருந்த சூழலில், பயணிகளின் உடைகள் மற்றும் துணிகளைப் பயன்படுத்தி கேப்டனின் கழுத்து, தலையில் வடிந்த தீவிர ரத்தப்போக்கை மிகக் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினார். அதே நேரத்தில், மருத்துவரின் மனைவி மற்ற பயணிகளுக்குத் தைரியம் கூறி அவர்களை அமைதிப்படுத்தினார். கேப்டன் ‘காக்பிட்’ கதவைத் திறக்காமல் போயிருந்தால் விமானத்தில் இருந்த அனைவருமே பிணமாகியிருப்பார்கள் என்றும், ஒரு பெரும் போரையே இந்த மீட்பு தடுத்து நிறுத்தியுள்ளது என்றும் மருத்துவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நடுவானில் தாக்குதல் நடந்தபோது விமானம் நிலைகுலைந்து வெறும் 29 வினாடிகளில் சுமார் 14 ஆயிரம் அடி செங்குத்தாகக் கீழே விழுந்தது. உடனடியாக காக்பிட்டிலிருந்து ஆபத்துக்கான ‘7700’ குறியீடும், விமானக் கடத்தலுக்கான ‘7500’ குறியீடும் அவசரமாக அனுப்பப்பட்டன. அப்போது பயணியாகப் பயணித்த 2 இங்கிலாந்து நாட்டு மாற்றுப் பயிற்சி விமானிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு விமானத்தின் கட்டுப்பாட்டை ஏற்றனர். தீவிரவாதியின் கொடூரக் கரங்களிலிருந்து விமானத்தை மீட்ட அவர்கள், சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கி 180 பேரின் உயிரைக் காப்பாற்றினர். தற்கொலைப்படை தாக்குதலுக்கு முயன்ற அந்த ஓமன் நாட்டுக் கொடூர இணை விமானி, சவூதி அதிகாரிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்டான். இது தொடர்பாக இஸ்ரேலின் மொசாட், ஷின் பெட் அமைப்புகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.