கருத்தரித்தல் இல்லாமலேயே தன் சந்ததியை உருவாக்கும் குருட்டுப் பாம்பு ?

 

மழைக்காலங்களில் வீட்டிற்குள் புழு போல செவிட்டு பாம்பு வருவதை பலரும் கவனித்திருப்பார்கள். இது ஆபத்தானது இல்லை என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த சிறிய பாம்பை பார்த்தால் என்ன செய்ய வேண்டும்? காதுக்குள் நுழையுமா, தோட்டத்திற்கு என்ன நன்மை செய்யும் என்பதை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்

மழைக்காலம் அல்லது வீட்டை சுற்றி ஈரப்பதம் அதிகமாக இருக்கும் நேரங்களில், தரையில் சிறிய கறுப்பு நிறத்தில் புழு போல நெளிந்து செல்லும் ஒரு உயிரினத்தைப் பார்த்துப் பலர் பயப்படுவது உண்டு. அது Brahminy blind snake ஆக இருக்கக்கூடும். இதனை தமிழில் குருட்டு பாம்பு, செவிட்டு பாம்பு என பல பெயர்களில் அழைப்பது வழக்கம்.

பார்ப்பதற்கு மண்புழு போல இருந்தாலும் இது ஒரு சிறிய பாம்பு வகையைச் சேர்ந்தது. பொதுவாக 4 முதல் 6 இன்ச் வரை வளரும் இதன் உடல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். கண்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் இதற்கு ‘blind snake’ என்ற பெயர் வந்தது. இது முற்றிலும் விஷமற்றது. மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.

ஈரமான மண்: மழைக்குப் பிறகு மண் ஈரமாகும்போது மண்ணுக்குள் இருக்கும் இந்தச் சிறிய பாம்புகள் வெளியே வருகின்றன. வீட்டைச் சுற்றித் தொடர்ந்து ஈரப்பதம் இருந்தால் இவை தென்படலாம்.

உணவுத் தேவை: எறும்புகள், கரையான்களின் முட்டைகள், புழுக்கள் இவற்றின் முக்கிய உணவாகும். வீட்டைச் சுற்றி எறும்பு புற்றுகள் அல்லது கரையான் தாக்குதல் இருந்தால் இவை வரக்கூடும்.
கதவு இடைவெளிகள்: உடல் மிகவும் மெல்லியதாக இருப்பதால், கதவுகளின் அடிப்பகுதியில் இருக்கும் சிறிய இடைவெளிகள் வழியாக எளிதாக வீட்டிற்குள் நுழைகின்றன.

இது வீட்டின் உள்ளே வருவதை பார்த்து அஞ்சினாலும், உங்கள் தோட்டத்தில் இந்தப் பாம்பு இருப்பது மிகவும் நல்லது. எறும்புகள் மற்றும் கரையான்களை உணவாக உண்பதால், தாவரங்களின் வேர்கள் மற்றும் இலைகள் சேதமடைவதை தடுக்கிறது. மண்ணுக்குள் இது வளைதோண்டி நகர்வதால் மண் தளர்த்தப்பட்டு, காற்று மற்றும் நீர் வேர்களுக்கு எளிதாக சென்று சேர்கிறது. உங்கள் தோட்டத்து மண் நல்ல வளம் மற்றும் உயிரினப் பன்முகத்தன்மையுடன் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது.
முதலில் பதற்றமடைவதை தவிர்க்க வேண்டும். இது விஷமற்ற பாம்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும் கையால் தொடுவை தவிர்க்க வேண்டும். பாம்பின் இனத்தை உறுதியாகத் தெரியாமல் கையால் பிடிக்க முயற்சிக்காதீர்கள்.
குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பான தூரத்தில் வைக்கவும். பாம்பை மிதிக்கவோ அல்லது அடிக்கவோ வேண்டாம். அது வீட்டை விட்டு வெளியே செல்ல கதவு அல்லது வழியைத் திறந்து விடுங்கள்.

தரையில் படுக்கும்போது இந்தச் சிறிய பாம்பு காதுக்குள் நுழைந்துவிடும் என்ற தவறான பயம் பலரிடமும் உள்ளது. இதன் காரணமாகவே, இதைப் பார்த்தவுடன் பலர் அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். இது பெயருக்குத் தான் பாம்பு. உண்மையில் முற்றிலும் விஷமற்றது.மனிதர்களின் காதுக்குள் இந்தப் பாம்பு நுழைந்ததாக இதுவரை எந்தவொரு மருத்துவ அல்லது அறிவியல் பூர்வமான பதிவுகளும் இல்லை. எனவே, தேவையில்லாத பயத்தால் இந்த உயிரினத்தை கொல்வதை தவிர்க்கலாம்.

பூந்தொட்டிகளின் கீழ் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் அகற்றுங்கள்.
வீட்டை சுற்றியுள்ள ஈரமான இலைக்குப்பைகள் மற்றும் குப்பைகளை அகற்றிச் சுத்தமாக வையுங்கள்.
கதவுகளின் அடிப்பகுதியில் உள்ள இடைவெளிகள், சுவர்கள் மற்றும் தரையில் உள்ள விரிசல்களை அடைக்கவும்.
பூந்தொட்டிகளில் பயன்படுத்தும் மண்ணை அவ்வப்போது பரிசோதியுங்கள்.
வீட்டைச் சுற்றி எறும்பு அல்லது கரையான் தொல்லை இருந்தால், அதனை இயற்கையாக அல்லது ரசாயன மருந்து மூலம் அகற்றும் பணியை செய்யுங்கள்.
மரக்கட்டைகள் மற்றும் பழைய அட்டைப்பெட்டிகளை வீட்டின் சுவரை ஒட்டி குவித்து வைக்க வேண்டாம்.

பிராமினி குருட்டுப் பாம்புகளில் ஆண் பாம்புகளே இல்லை என்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். இவை parthenogenesis எனப்படும் பாலினமற்ற இனப்பெருக்க முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. அதாவது, கருத்தரித்தல் இல்லாமலேயே பெண் பாம்பு தன் சந்ததியை உருவாக்கும் திறன் கொண்டது.

வீட்டிற்குள் சிறிய புழு போன்ற பாம்பு தென்பட்டால் பயப்படத் தேவையில்லை. இருப்பினும், புகைப்படம் அல்லது நிபுணர் வழிகாட்டுதல் இல்லாமல் எந்தச் சிறிய பாம்பையும் குருட்டுப் பாம்பு என்று முடிவெடுக்காமல் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும்.