வெள்ளிக்கிழமை மிகவும் சக்தி வாய்ந்த, அருள் நிறைந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் மிகவும் சக்தி நிறைந்ததாகவும், உடனடியாக பலன் தரக் கூடியதாகவும் கருதப்படுகிறது. இது மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற்று, நலம் பெறுவதற்கான நாளாக கருதப்படுவதால் இந்த நாளில் சில தவறுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் சில தவறுகளை தவிர்ப்பதால் மகாலட்சுமியின்கோபத்தில் இருந்து விடுபட முடியும்.
இந்துக்களின் வழிபாட்டு மரபில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்கம் பிறைந்த நாளாக கருதப்படுகிறது. இதனால் நவகிரகங்களின் அருளை பெறுவதற்காக அந்தந்த கிழமைகளில் அதற்குரிய கிரகங்களின் வழிபாட்டினையும், அந்த கிரகத்திற்கு அதிபதியாக விளங்கும் தெய்வத்தையும் வழிபடுவதால் வாழ்வில் ஏற்படும் பலவிதமான துன்பங்களில் இருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது. அப்படி வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரியதாகும். ஒருவருடைய வாழ்க்கையில் மகாலட்சுமியின் அருள் கிடைக்கவும், சுக போகமான வாழ்க்கை அமைவதற்கும் சுக்கிர பகவானின் அனுகிரகம் மிகவும் அவசியமானதாகும்.
அப்படி சுக்கிர பகவானுக்குரிய வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டு, அவரது அருளை பெற வேண்டும். இதனால் சுபிட்சமான வாழ்க்கை அமையும். சகல விதமான செல்வ வளங்களும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்று நம்பப்படுகிறது. ஆனால் வெள்ளிக்கிழமையில் நாம் செய்யும் சில தவறுகளால் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைப்பது தடைபடுவதுடன் மகாலட்சுமியின் கோபத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும்.
வெள்ளிக்கிழமையில் கண்டிப்பாக செய்யக் கூடாத தவறுகள் :
1. பணம் மற்றும் பொருட்கள் கடன் கொடுத்தல் – பணம், பால், தயிர், உப்பு மற்றும் ஊசி போன்றவற்றை மற்றவர்களுக்கு கடனாகத் தரக்கூடாது. அதே போல் வெள்ளிக்கிழமையில் கடன் வாங்குவதும் தவறு.
2. வீடு துடைத்தல் – இந்த நாளில் வீட்டைத் தண்ணீர் ஊற்றி துடைக்கலோ அல்லது கழுவவோ கூடாது. விளக்கு உள்ளிட்ட பூஜை சாமாண்களை வெள்ளிக்கிழமையில் சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
3. மாலை நேரம் பெருக்குதல் – விளக்கேற்றிய பிறகு வீட்டைப் பெருக்குவதோ, குப்பைகளை வெளியே கொட்டுவதோ கூடாது.
4. அழுகை மற்றும் கோபம் – வீட்டில் உள்ள பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் கோபப்படுவதோ அல்லது அழுவதோ கூடாது. வெள்ளிக்கிழமையில் மாலை நேரத்தில் வீட்டில் கணவன் – மனைவி சண்டையிடுவது மகாலட்சுமியின் அருளை தடுத்து விடும்.
5. துணி தைத்தல் – எந்த துணிகளையும் இந்த நாளில் தைக்கக் கூடாது.
6. செருப்பு மற்றும் துடைப்பம் – வீட்டின் நிலை வாசலுக்கு நேராகச் செருப்புக்களைக் கழற்றி விடுவதையோ அல்லது துடைப்பதையோ எல்லோர் கண்ணிலும் படும்படி வைப்பதையோ தவிர்க்க வேண்டும்.
7. மாலையில் தூங்குதல் – வெள்ளிக்கிழமையில் மாலை நேரத்தில் தூங்குவது, வீட்டில் விளக்கேற்றாமல் இருள் சூழ்ந்திருக்க செய்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
8. விருந்தினர்களை அவமதித்தல் – வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மனம் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் மன வேதனையுடன் சென்றால் அவர்களுடன் சேர்ந்து வீட்டில் இருக்கும் மகாலட்சுமியும் சென்று விடுவாள் என சொல்லப்படுகிறது.
மகாலட்சுமியின் கோபத்தால் வரும் தீமைகள் :
வீட்டில் மகாலட்சுமியின் அருள் இல்லாமல் போனாலும், மகாலட்சுமி நம் மீது கோபப்பட்டாலும் வீட்டில் வறுமை, பணத்தட்டுப்பாடு, நிம்மதியின்மை, கடன் தொல்லை போன்ற பாதிப்புக்கள் ஏற்படும். தூய்மையின்மை, உணவு மற்றும் முதியவர்களை அவமதித்தல் போன்ற செயல்களால் லட்சுமி கோபம் கொண்டு வீட்டை விட்டு நீங்குவதாக ஐதீகம். வீட்டிற்கு வர வேண்டிய பணம் வராமல் திடீரென நின்று விடுவது, சேமிப்புகள் கரைவது, கடன் தொல்லை அதிகரிப்பது, வீட்டில் காரணமே இல்லாமல் அடிக்கடி சண்டை வருவது, முயற்சிகளில் தொடர் தோல்வி, செயல்களில் சோம்பலும் அதிகரிக்கும்.



