ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய 3 முக்கியமான பொருட்கள் எவை தெரியுமா?

 

ஆடிப்பெருக்கு அன்று வாங்கும் பொருட்கள் பெருக்கத்தை தரும் என்பதால் விலை உயர்ந்த பொருட்கள், சொத்துக்கள், புதிய ஆடைகள் வாங்குவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு அன்று விலை உயர்ந்த பொருட்களை தான் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. இந்த நாளில் வீட்டில் மங்களங்கள் பெருக வேண்டும் என வேண்டிக் கொண்டு மங்கள பொருட்கள் சிலவற்றை வாங்கி வீட்டில் வைக்கலாம். அப்படி ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய முக்கியமான 3 பொருட்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதத்தின் 18வது நாளை ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18ம் பெருக்கு என தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். தமிழகம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட பகுதி என்பதால் ஆடிப்பெருக்கு நாள் நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறு, குளங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது பண்டை கால வழக்கம். அனைத்து நீர் நிலைகளையும் காவிரி தாயாக பாவித்து நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இது பெருக்கத்திற்குரிய நாளாக கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கு அன்று செய்யப்படும் வழிபாடு, தானம், வாங்கும் பொருள், துவங்கப்படும் செயல்கள் பல மடங்காக பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஆடிப்பெருக்கு :
ஆடி மாதம் சுபகாரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். இது வழிபாட்டிற்கான மாதம் என்பதால் வேண்டுதல், நேர்த்திக்கடன் ஆகியவற்றை தான் செய்வார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு நாளில் புதிய பொருட்கள், குறிப்பாக மங்கள பொருட்கள், சொத்துக்கள் வாங்குவது, சுபகாரிய பேச்சுக்கள் துவங்குவது, வியாபாரம், தொழில் துவங்குவது போன்றவற்றை மக்கள் செய்வதுண்டு. அதிகமானவர்கள் இந்த நாளில் தங்கம், புதிய வாகனம் போன்றவற்றை வாங்குவது உண்டு. ஆனால் இன்று தங்கம் விற்கும் விலையில் அனைவராலும் தங்கம், புதிய கார், பைக் போன்றவற்றை வாங்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் ஆடிப்பெருக்கு நாளில் செல்வம், மங்களங்கள் பெருகுவதற்கு வேறு என்னென்ன பொருட்களை வாங்கலாம் என தெரிந்து கொள்ளலாம். வேறு எதுவும் வாங்க முடியாதவர்கள் எளிமையாக மூன்று பொருட்களை மட்டும் வாங்கலாம்.

 

ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய 3 பொருட்கள் :
1. கல் உப்பு
2. விரலி மஞ்சள்
3. துவரம் பருப்பு
இவை மூன்றையும் நல்ல நேரத்திற்குள் வீட்டிற்கு வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து வழிபட்ட பிறகு, சிறிது நேரம் கழித்து சமையலறைக்கு எடுத்துச் சென்று தினசரி சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆடிப்பெருக்கு அன்று மாலை 6 மணிக்கு முன்பாக வீட்டிற்குள் இந்த மூன்று பொருட்களையும் முடிந்த வரை வாங்கி வர வேண்டும். மூன்று பொருட்களையும் வாங்க முடியா விட்டாலும் ஏதாவது ஒரு பொருளையாவது சிறிதளவு வாங்கி வைக்கலாம்.

ஆடிப்பெருக்கு அன்று அரிசி, துவரம் பருப்பு, மஞ்சள் தவிர குங்குமம், மாங்கல்யசரடு, பச்சைக் கற்பூரம், கண்ணாடி போன்ற பொருட்களையும் வாங்கலாம். இது தவிர முக்கியமாக வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருட்களை வாங்கலாம். திருமணம் போன்ற மங்கள காரியங்களுக்கு தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவது சிறப்பு. அதே போல் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான பேச்சுவார்த்தையை துவங்குவது, பத்திரிக்கை அச்சிட கொடுப்பது, கட்டிட கட்டுமான பணிகளை துவக்குவது போன்ற பணிகளையும் செய்யலாம்.