
காதல் விவகாரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் சில நேரங்களில் விபரீதமாக முடிந்து விடுகின்றன. அப்படியொரு சம்பவம் கேரள மாநிலம் திரூரில் நடந்துள்ளது. காதலனை நள்ளிரவில் வரவழைத்து, கூலிப்படையுடன் சேர்ந்து கடத்தி தாக்கியதாக 19 வயது இளம்பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் போலீசார் விசாரித்து வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. என்ன நடந்தது? கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பெருமொடியூர் பனங்காட்டுதொடி பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் சஃபானா.. இவர் பட்டாம்பி கொண்டூர்கரையை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
கேரளா காதல் ஜோடி ஆனால், 2 பேருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காதலன் தன்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும், சுதந்திரம் அளிப்பதில்லை என்றும் கருதிய சஃபானா, அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டு, சில தினங்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் திரூர் வடக்கு அன்னாரா பகுதியில் உள்ள தனது தோழிகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையே, சஃபானாவைத் தேடி அவரது காதலனும், நண்பரும் நள்ளிரவில் திரூருக்கு வந்துள்ளனர். அப்போது சஃபானாவை செல்போனில் தொடர்புகொண்டு
பேசியிருக்கிறார்கள். இதையடுத்து, காதலனையும் அவரது நண்பரையும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொல்லியுள்ளார் சஃபானா. அவர்களை அழைத்து வருவதற்காக அவரது தோழி நாதியா (20) அங்கு சென்றுள்ளார். தோழிகள், நண்பர்கள் நாதியாவுடன் இர்ஷாத் (28), அசாருதீன் (25) ஆகிய 2 பேரும் சென்றுள்ளனர். நாதியா திரூர் அன்னாராவைச் சேர்ந்தவர். இர்ஷாத்தும், அசாருதீனும் பரவண்ணா பகுதியைச் சேர்ந்தவர்கள். அதன்பிறகு, காதலனையும் அவரது நண்பரையும் அங்கிருந்து தாழேபாலம் பைபாஸ் வழியாக அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் பைக்கில் அழைத்துச் சென்று, பிறகு மற்ற கூட்டாளிகள் காத்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு 2 பேரையும் காரில் ஏற்றி கடத்தியுள்ளனர்.
காருக்குள் காதலன் காருக்குள் வைத்து காதலனையும் அவரது நண்பரையும் அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது. காதலனின் செல்போனையும் பறித்துள்ளனர். பிறகு, அதிகாலை 1.30 மணியளவில் தாழேபாலம் ஆற்றங்கரையோரச் சாலையில் 2 பேரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, காதலனுடன் வந்திருந்த நண்பர் உடனடியாக திரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன்பேரில், திரூர் காவல் ஆய்வாளர் ஜலீல் கருத்தேடத் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், திரூர் தாழேபாலம் பகுதியில் சஃபானா (19) உட்பட 5 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். சஃபானாவின் தோழிகளான நாதியா (20), ரபீபா (25) மற்றும் இர்ஷாத் (28), அசாருதீன் (25) ஆகிய 4 பேரும் அவருடன் கைது செய்யப்பட்டனர். இதில் நாதியா, திரூர் வடக்கு அன்னாரா புதுக்குளங்கரை பகுதியைச் சேர்ந்தவர். ரபீபா திரூர் பகுதியைச் சேர்ந்தவர். இர்ஷாத் பரவண்ணா குட்டியசனின் புரக்கல் பகுதியையும், அசாருதீன் பதனத் பகுதியையும் சேர்ந்தவர்கள்.
கொட்டேஷன் தந்த பெண் சஃபானாவிடம் போலீசார் விசாரித்தபோது, “காதலன் எனக்கு தொடர்ந்து டார்ச்சர் தந்து வந்தார். அவரது தொல்லை காரணமாகவே அவரை ஒழித்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்காக என்னுடைய நண்பர்களிடம் உதவி கேட்டு, காதலனைத் தீர்த்துக்கட்ட கொட்டேஷன் தந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான இர்ஷாத், அசாருதீன் ஆகிய 2 பேரும் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்றவர்களாம். மேலும், கடலோரப் பகுதிகளில் நடந்த கொலை முயற்சி, அடிதடி சம்பவங்களிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் திரூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்படி, 5 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.



