இஸ்ரேல் காசா மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் 6 பேர் உயிரிழப்பு

தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அறுவை சிகிச்சை மருத்துவர் உட்பட 6 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.இஸ்ரேல் அரசியல்

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனை வளாகத்தின் மீது வியாழக்கிழமை அதிகாலை இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 6 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர் என்றும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் காசா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் அறுவை சிகிச்சை மருத்துவர் ரிஸ்க் அபு ஷைரா (53), ஒரு குழந்தை மற்றும் மாற்றுத்திறனாளி நோயாளி ஆகியோர் அடங்குவர்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள அல்-யாசின் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வந்த அறுவை சிகிச்சைப் பிரிவை இந்தத் தாக்குதல் நேரடியாகத் தாக்கியுள்ளது. தாக்குதல் நடந்தபோது மருத்துவர் ரிஸ்க் அபு ஷைரா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலால் கட்டிடத்தின் இரண்டாவது தளம் சேதமடைந்ததுடன், தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினர் ராணுவ மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாட்டு மையமாகப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மூத்த ஹமாஸ் பயங்கரவாதி மற்றும் தீவிரவாதிகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டாலும், அதற்கான ஆதாரங்கள் எதையும் அந்நாட்டு ராணுவம் வெளியிடவில்லை.

தெற்கு காசாவில் ஓரளவு செயல்பட்டு வந்த கடைசி முக்கியப் பரிந்துரை மருத்துவமனையாக நாசர் மருத்துவமனை விளங்கி வந்த நிலையில், தற்போதைய தாக்குதல் மருத்துவச் சேவைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. காயமடைந்த நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகளும், சேதமடைந்த கட்டிடப் பகுதிகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், காசாவில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.