போதைப்பொருள் கடத்தலுக்குப் புகழ்பெற்ற இலத்தீன் அமெரிக்கக் கார்டெல்கள் மற்றும் தீவிரவாதக் குழுக்கள், தற்போது தங்களின் கவனத்தைப் பில்லியன் டாலர் மதிப்புள்ள சட்டவிரோதத் தங்கச் சுரங்கங்கள் பக்கம் திருப்பியுள்ளன. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், கொலம்பியா, பெரு, மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளின் தங்கச் சுரங்கப் பள்ளத்தாக்குகளைக் கைப்பற்றக் கார்டெல்களுக்கு இடையே ரத்த வெறி பிடித்த மோதல்கள் மூண்டுள்ளன.
குறிப்பாக மெக்சிகோவின் சோனோரா பாலைவனப் பகுதியில் அமைந்த பில்லியன் டாலர் மதிப்பிலான ‘லா சீனேகா’ தங்கச் சுரங்கத்தைக் கைப்பற்ற ‘லாஸ் சாபிடோஸ்’ மற்றும் டெல்டாஸ் கார்டெல் குழுக்கள் இடையே துப்பாக்கிச் சண்டை தீவிரமடைந்துள்ளது. இப்பகுதிகளில் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் பண்ணை வீடுகளைக் கார்டெல் அமைப்புகள் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதிநவீன ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மற்றும் ஹெவி ரக ஆயுதங்களுடன் சுரங்கப் பகுதிகளைக் காவல் காத்து வருகின்றன.
இதேபோன்று பெரு நாட்டின் படாஸ் ஆண்டிஸ் மலைப் பகுதியில் உள்ள தங்கச் சுரங்கத் நடைபாதைகளிலும், கொலம்பியாவின் அடர்ந்த காடுகளிலும் கார்டெல் நிழல் படைகள் நிலத்தடிச் சுரங்கங்களைக் கைப்பற்ற மோதி வருகின்றன. கொகெய்ன் போதைப்பொருளை விடத் தங்கத்தின் மூலம் அதிக லாபம் கிடைப்பதாலும், அதை எளிதாகப் பணமோசடி செய்ய முடிவதாலும், கார்டெல்கள் தங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து உள்ளூர் பாரம்பரியச் சுரங்கத் தொழிலாளர்களை அச்சுறுத்தி வெளியேற்றி வருகின்றன.
கார்டெல்களின் இந்தத் தங்க வேட்டையால் அப்பகுதிகளின் சுற்றுச்சூழல் சீர்கேடடைவதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் உயிரிழந்து வருகின்றனர். போதைப்பொருள் கடத்தலைக் கடந்து, சட்டவிரோதத் தங்க வர்த்தகம் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் இந்த நிழல் உலகக் குற்றக் குழுக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசுகளும் ராணுவமும் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன.



