முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாம் சரவணன், ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆறு கொலை வழக்குகள், கடத்தல் வழக்கு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள பாம் சரவணனுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தற்போது புளியந்தோப்பு காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னை செம்பியம் பகுதியில் நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டு பின்னர் உயிரிழந்த நாகேந்திரனின் மகன் அசுவத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணை தொடர்பாகவும், இதில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்த பாம் சரவணனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த 2024ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த பாம் சரவணன் மீது ஆறு கொலை வழக்குகள், கடத்தல் வழக்கு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அவர், நீதிமன்ற விசாரணைகளில் முறையாக ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்த பாம் சரவணன், அங்கிருந்த தனது வீட்டைக் காலி செய்துவிட்டு ஊத்துக்கோட்டை பகுதிக்கு குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு தங்கியிருந்த நிலையில், போலீசாரின் தேடுதலில் இருந்து தொடர்ந்து தப்பித்து வந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே, பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பாம் சரவணனுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை ஊத்துக்கோட்டை அருகே வைத்து பாம் சரவணனை போலீசார் கைது செய்தனர். ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட பாம் சரவணனை புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கொலை வழக்கில் அவரது தொடர்பு, தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் அவர் எங்கு தங்கியிருந்தார், அவருக்கு யார் உதவினர் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாம் சரவணன் ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டிருப்பது வழக்கில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. அவரிடம் நடைபெறும் விசாரணையின் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர் பிரபல முன்னாள் ரவுடி நாகேந்திரன் எதிர் அணியினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது



