பிரான்ஸிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் 110 டன் உணவுப் பொருட்கள் கடத்தல் – இலங்கையர்கள் இருவர் சிக்கினர்

 

பிரான்ஸிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் சுமார் 110 டன் அறிவிக்கப்படாத உணவுப் பொருட்களை கடத்தி வந்ததாகக் கூறப்படும் இரு இலங்கையர்கள் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவை வாட் மாநில காவல்துறையினரும், சுவிஸ் கூட்டாட்சி சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த குழுவினர் ஜெனீவா மற்றும் வாட் மாகாணங்களில் உள்ள எட்டு உணவுக் கடைகளுக்கு இந்தப் பொருட்களை விநியோகித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 81,000 சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான சுங்க வரி மற்றும் மதிப்புக்கூட்டல் வரி (VAT) செலுத்தப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஓட்டுநர் வாட் மாநில காவல்துறையினரின் கவனத்திற்கு பிரான்ஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது.

Bursins பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அந்த வாகனம் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டபோது, அதன் ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், வாகனத்தில் சுமார் 3,300 கிலோகிராம் அறிவிக்கப்படாத உணவுப் பொருட்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் சூரியகாந்தி எண்ணெய், வாழைப்பழங்கள், வெங்காயம் மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

81,000 பிராங்குகள் வரி செலுத்தப்படவில்லை இந்தக் கடத்தல் நடவடிக்கைக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தலைமை வகித்ததாகவும், அவருடன் மேலும் நான்கு பேர் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஓட்டுநருடன் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இரண்டு இலங்கைப் பிரஜைகளும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி, உணவுப் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதற்குப் பதிலாக, முதலில் பிரான்ஸ் எல்லைப் பகுதியில் உள்ள கேரேஜ் ஒன்றில் அவற்றைச் சேமித்து வைத்து, பின்னர் சிறிய சரக்கு வாகனங்கள் மூலம் குறைந்த அளவுகளில் சுவிட்சர்லாந்துக்குள் கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘24 Heures’ செய்தியின்படி, கடத்தப்பட்ட பொருட்களின் மதிப்பின் அடிப்படையில் சுமார் 75,000 சுவிஸ் பிராங்குகள் சுங்க வரியும், 6,000 பிராங்குகள் VAT-உம் செலுத்தப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.5 டன் Buldak நூடுல்ஸ் பறிமுதல் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களில் தென் கொரியாவின் பிரபலமான Buldak நூடுல்ஸும் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் சுமார் 5.5 டன் Buldak நூடுல்ஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் கடந்த சில ஆண்டுகளாக இந்த அதிக காரத்தன்மை கொண்ட நூடுல்ஸுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன், அதன் காரத்தன்மை தொடர்பிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.