பண்டைய எகிப்தியர்கள் பிரம்மாண்டமான பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற பல நூற்றாண்டு கால விடைதெரியாத கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் ஒரு புதிய தொல்பொருள் ஆய்வு வெளிவந்துள்ளது. எகிப்தின் தலைநகர் கெய்ரோவிற்கு அருகே உள்ள தஹ்ஷூர் பகுதியில் அமைந்த புகழ்பெற்ற ‘சிவப்பு பிரமிடு’ அருகே பல தசாப்தங்களாக வெறும் பாறைப் பாதைகள் அல்லது பாறை உயர்த்திகள் என்று கருதப்பட்டு வந்த இரு அமைப்புகள், உண்மையில் பழங்காலப் பிரம்மாண்ட அணைகள் என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
சாட்டிலைட் படக்கோர்ப்புகள், நீர்நிலைப் பகுப்பாய்வு மற்றும் நிலப்பரப்பு மறுசீரமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் ‘நேச்சர் ஹெரிடேஜ் சயின்ஸ்’ (Nature Heritage Science) இதழில் வெளியிடப்பட்டுள்ளன. பார்வோன் ஸ்னெஃபெருஆட்சிக் காலத்தில் சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த இரு நீர் அமைப்புகளும் 600 முதல் 700 மீட்டர்கள் வரை நீண்டு, எகிப்தின் பாலைவனப் பகுதியில் பாயும் வெள்ளநீரைச் சேமிக்கவும் அதை நெறிப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்த பிரம்மாண்ட அணைகள் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு, பிரமிட் கட்டுமானப் பணிகளில் மிக முக்கியமான பல பயன்பாடுகளைக் கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட நீர் ஓட்டம் மூலம் கனமான சுண்ணாம்புப் பாறைகளை படகுகள் மூலம் கட்டுமானப் பகுதிக்கு எளிதில் கொண்டு செல்ல முடிந்ததோடு, காரை (Mortar) தயாரிக்கவும், தூசிகளைக் கட்டுப்படுத்தவும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடிநீர் மற்றும் பயன்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எகிப்தியர்கள் வெறும் கல் செதுக்கும் வல்லுநர்கள் மட்டுமல்ல, பாயும் நீரைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்திய மிகச்சிறந்த நீரியல் பொறியாளர்களாகவும் திகழ்ந்துள்ளனர் என்பதை இந்த ஆய்வு உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. மணலுக்கு அடியில் இத்தனை காலம் மறைந்திருந்த இந்தத் தொழில்நுட்பம், பண்டைய மனித நாகரிகத்தின் பொறியியல் திறனுக்கு மற்றொரு புதிய சான்றாக அமைந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்



