600 மில்லியன் சொத்துகளை மேர்வின் ஈட்டியது எவ்வாறு?

 

தொழிலாளர் மற்றும் பொதுமக்கள் தொடர்பு முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வா தொடர்பான விளக்கமளிக்கப்படாத சொத்துகள் வழக்கில், ரூபா 600 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து நீதிமன்றத்தில் தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் 2010 மார்ச் 31 முதல் 2012 மார்ச் 31 வரை அமைச்சராகப் பணிபுரிந்த காலப்பகுதியில் விளக்கம் அளிக்க இயலாத வகையில் சொத்துகள் மற்றும் நிதி முதலீடுகளில் ஈடுபட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பான வழக்கில், ரூபா 600 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து நீதிமன்றத்தில் தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

குறிப்பாக, 2010 மார்ச் 31 முதல் 2012 மார்ச் 31 வரை ஒரு வங்கியில் ரூ.182 மில்லியனுக்கும் அதிகமான நிலையான வைப்புகள், கொழும்பு மற்றும் ராஜகிரிய உள்ளிட்ட பகுதிகளில் பெறப்பட்டதாகக் கூறப்படும் விலையுயர்ந்த காணிகள் மற்றும் சொத்துகள், குறித்த இரண்டு ஆண்டுகளில் வாங்கப்பட்டதாகவும், மேலும் 7 வாகனங்கள், காப்புறுதிகள் மற்றும் பல்வேறு வங்கிக் கணக்குகள், குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் சுமார் ரூ.485 மில்லியன் அளவிலான விளக்கமளிக்கப்படாத சொத்துகள் மற்றும் பணம் எவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கு வழக்குத் தொடுத்துள்ள தரப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.