கற்பிட்டி விமானப்படை துப்பாக்கிச் சூட்டுத் தள சம்பவம் பற்றி விசேட விசாரணை!

 

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கற்பிட்டி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சியின்போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில், விமானப்படையினரால் விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமானப்படை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், குறித்த பயிற்சி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், எவ்வித முன்கூட்டிய அனுமதியுமின்றி மூன்று நபர்கள் அந்தப் பாதுகாப்பு எல்லைக்குள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு விமானப்படை வீரர்களும், விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் அந்த மூன்று நபர்களிடமும் அடையாளத்தை வினவியுள்ளனர். இதன்போதே, அவர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரி எனவும், ஏனைய இருவரும் அவருடன் வந்த சிவிலியன்கள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த விசாரணையின்போது இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சிகள் இடம்பெறும் காலப்பகுதியில், குறித்த பிரதேசம் பொதுமக்களுக்குத் தடைசெய்யப்பட்ட ஒரு பாதுகாப்பு வலயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அங்கு நுழையும் அனைத்து நபர்களினதும் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு இலங்கை விமானப்படையையே சாரும்.

அதற்கமைய, மனித பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்கும் நோக்கில் விமானப்படையினரால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இச்சம்பவம் குறித்து விசேட விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விமானப்படைத் தளபதியினால் விசேட விசாரணைச் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.